இந்து மதத்தையும், புனித நூலையும் அவமதித்த சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் நாக்கை அறுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைகள் துறையின் மாவட்டத் தலைவர் பண்டிட் கங்கா ராம் சர்மா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் இந்து மதத்தை அவமதித்து வருவதாகவும், இந்து மத புத்தகமான ராம்சரித்மனாஸை அவதூறாக பேசியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் சுவாமி பிரசாத் மெளரியா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன் தினம் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் “ பிராமணியத்தின் வேர்கள் மிகவும் ஆழமானவை. அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும் பிராமணியம் தான் காரணம். இந்து என்பது ஒரு மதமே இல்லை. இந்து மதம் என்பது வெறும் புரளி தான். இந்த நாட்டில் உள்ள தலித்கள், பழங்குடியினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை சிக்க வைக்கும் சதி தான் பிராமணியம். அந்த பிராமண மதத்தை இந்து மதம் என்று முத்திரை குத்தி வைத்துள்ளது. இந்து மதம் இருந்திருந்தால் பழங்குடியினர் மதிக்கப்பட்டிருப்பார்கள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் மதிக்கப்பட்டியிருப்பார்கள். ஆனால், என்ன ஒரு கேலிக்கூத்து” என்று எழுதி ஒரு வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் மொராதாபாத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைகள் துறையின் மாவட்டத் தலைவராக பண்டிட் கங்கா ராம் சர்மா, சுவாமி பிரசாத் மெளரியா கூறிய கருத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினரான சுவாமி பிரசாத் மெளரியா இந்து மத புத்தகமான ராம்சரித்மானஸை மட்டுமல்ல, இந்து மதத்தையும் அவமதித்து வருகிறார். அவருடைய நாக்கை அறுப்பவர்களுக்கு ரொக்கப்பரிசாக ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.