கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டம் கட்டிகேஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தர்யா (16). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி இரவு அவர் வசித்த வந்த பகுதியில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் சவுந்தர்யா, அருகே இருக்கும் கடைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுத்திருக்கிறார். அப்போது, அந்த வண்டியில் பெட்ரோல் இல்லாததைக் கண்ட சவுந்தர்யா, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து இருசக்கர வாகனத்தில் ஊற்ற முடிவு செய்தார்.
அப்போது, மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பாட்டிலில் இருந்த பெட்ரோலை வாகனத்தில் ஊற்றிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வேளையில், திடீரென்று மின்சாரம் வந்ததால் மின்விளக்குகள் எரிந்துள்ளன. உடனே, சவுந்தர்யா தான் கையில் வைத்துக் கொண்டிருந்த பெட்ரோல் பாட்டிலையும், அதன் அருகில் மெழுகுவர்த்தியையும் வைத்துள்ளார். அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக மெழுகுவர்த்தியில் இருந்து விழுந்த தீப்பொறி பெட்ரோல் பாட்டிலில் விழுந்து தீப்பிடித்து எரிந்து வெடித்துள்ளது. இதில் அங்கு இருந்த சவுந்தர்யா உடலில் தீப்பிடித்து எரிந்தது.
சவுந்தர்யாவின் அலறல் சத்தத்தைக் கேட்ட அவரின் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அவர்கள் சவுந்தர்யாவின் உடலில் பிடித்த தீயை அணைத்தனர். இதில் படுகாயமடைந்த சவுந்தர்யாவை மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு 3 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.