கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இருப்பினும் அடுத்த முதல்வர் யார் என்பதில் முன்னால் முதல்வர் சித்தராமையா மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இடையே போட்டி நிலவி வந்த நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் சித்தராமையா முதல்வர் என்றும், டி.கே.சிவகுமார் துணை முதல்வர் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவியேற்பு விழா பெங்களூருவில் இன்று மதியம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் 8 அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், பாட்டீல், சதீஷ் ஜாகிஹோலி, பிரியங்க் கார்கே (காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன்), ராமலிங்க ரெட்டி, ஷமீரா அகமது கான் உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்றுள்ளன.