2,000 கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்ட தொழிலாளி ஒருவர் வீட்டிற்குச் சென்றவுடன் பாம்பு கடித்து உயிரிழந்துள்ள சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான சல்மான் கான் என்ற இளைஞர் பெங்களூரூவில் கட்டுமான வேலை பார்த்து வந்துள்ளார். ஊரடங்கால் வேலை இல்லாத நிலையில், ஷ்ராமிக் ரயிலில் சொந்த ஊர் செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் ரயிலில் டிக்கெட் கிடைக்காததால், தனது நன்பர்களுடன் சேர்ந்து நடைப்பயணமாகவே தனது சொந்த ஊருக்குப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இறுதியில் சுமார் 12 நாட்களாக 2,000 கி.மீ பயணம் செய்து தனது சொந்த கிராமத்தை அடைந்த அவர், தனது தாயைச் சந்தித்து, வீட்டிற்குத் திரும்பியதற்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் சில நிமிடங்கள் கூட அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
வீட்டிற்கு வந்த சல்மான் கான், காய், கால்களை கழுவுவதற்காக வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். நீண்ட நேரமாக சல்மான் வீட்டிற்குள் வராததைப் பார்த்த அவரது தாய், பின்புறம் சென்று மகனைத் தேடியுள்ளார். அப்போது, பின்புறம் உள்ள கரும்பு தோட்டத்தில் மகன் பாம்பு கடித்து உயிரிழந்து கிடந்தது தெரியவந்துள்ளது. 2,000 கிலோமீட்டர் நடைப்பயணத்திற்கு பிறகு தன்னைப் பார்க்க வந்த மகன் உயிரற்று கிடப்பதைக் கண்ட தாய் அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அங்குள்ளவர்களை அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவ்வளவு நீண்ட தூர பயணத்திற்குப் பின் இளைஞர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.