புதிய கல்வி வரைவு கொள்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. இதில் மும்மொழி கொள்கையை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளோடு சேர்த்து ஹிந்தி மொழியையும் கல்வி திட்டத்தில் சேர்க்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதை அடுத்து ஹிந்தி மொழியை நீக்கி அறிக்கையில் திருத்தம் செய்தது. அந்த அறிக்கையில் செய்யப்பட்ட திருத்தத்தில் மூன்றாவது மொழி என்ன என்பதை மாணவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என அறிவித்தது.
இந்நிலையில் புதிய கல்வி வரைவு திட்டம் தொடர்பாக விவாதிக்க மாநில பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்களுக்கு மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் புதிய கல்வி வரைவு கொள்கையில் உள்ள அம்சங்கள் குறித்தும், அதில் உள்ள முரண்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் புதிய வரைவு கல்வி கொள்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.