/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/994_157.jpg)
டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதையும், ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றவும், நியமிக்கவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பதையும் எதிர்த்து டெல்லி ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, ‘ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்திற்கு ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழுமையான அதிகாரம் உள்ளது. அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும்’ என்று தெரிவித்தனர். ‘அன்றாட நிர்வாகங்கள் அனைத்தையும் மேற்கொள்ள துணைநிலை ஆளுநரை விட முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உள்ளது. எனவே ஆளுநர் மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படி தான் செயல்பட வேண்டும். அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்’ என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
ஆனால் டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் மாநில அரசுக்கே முழு அதிகாரம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யும் வகையில், நிர்வாக விவகாரங்களில் துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என குடியரசு தலைவர் ஒப்புதலுடன் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது.
இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக டெல்லி சேவை மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதம் நேற்று (3.8.2021) நடைபெற்றது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதத்திற்குப் பிறகு உள்துறை மந்திரி அமித் ஷா பதிலுரை வழங்கினார். அதன்பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக எம்.பிக்கள் நன்றி தெரிவித்து பேசினர். ஆனால் இதற்கு ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மத்திய இணையமைச்சர் மீனாட்சி லோகி பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி குறுக்கிட்டு டெல்லி சேவை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த மீனாட்சி லோகி, “வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருங்கள்; இல்லையென்றால் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும்” என எச்சரித்தார். அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சியினர் மீது ஆளும் பாஜக அரசு அமலாக்கத்துறையை ஏவி விடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், இணையமைச்சரின் பேச்சுபெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.மேலும் மக்களவையிலேயேஎம்.பிக்களை மிரட்டும் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனங்களைத்தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)