Skip to main content

மயக்க ஊசி போட்டு மருத்துவ மாணவி தற்கொலை; போலீசிடம் சிக்கிய உருக்கமான கடிதம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Medical student incident; letter caught by the police

 

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாரமூடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் அசீஸ். இவரது மகள் ஷஹ்னா (28) எம்.பி.பி.எஸ் படிப்பு முடித்துள்ளார். இதனையடுத்து, இவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைப் பிரிவில் முதுகலை படித்து வந்தார். மேலும், ஷஹ்னா தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுடன் மருத்துவக் கல்லூரி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி படித்து வந்தார். 

 

இதற்கிடையே, ஷஹ்னாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன் தினம் (05-12-23) ஷஹ்னாவுக்கு மருத்துவமனையில் இரவு பணி இருந்தது. ஆனால், அவர் பணிக்கு செல்லாமல் அறைக்குள்ளே தங்கியிருந்தார். இதனால், சந்தேகமடைந்த சக மாணவிகள் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. அதனால், கதவை உடைத்து திறந்து பார்த்துள்ளனர். அங்கு ஷஹ்னா மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

 

அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது, ஷஹ்னா நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின் போது செலுத்தும் மயக்க ஊசியை தானே போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இந்த தகவலை அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

 

அந்த விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் ஷஹ்னா, தன்னுடன் படித்து வந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களுக்குள் திருமணம் நடத்த காதலன் வீட்டில் சம்மதித்துள்ளனர். ஆனால், வரதட்சணையாக 150 பவுன் நகை, 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் ஆகியவை வேண்டும் என்று காதலன் வீட்டில் கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த வரதட்சணையை கொடுக்க முடியாததால் மனமுடைந்து போன ஷஹ்னா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, ஷஹ்னா தங்கியிருந்த அறையை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். 

 

அந்த சோதனையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஷஹ்னா தன் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் மீட்டனர். அந்த கடிதத்தில், ‘இந்த உலகத்தில் அன்பிற்கு எந்த மரியாதையும் கிடையாது. எனது அப்பா போய்விட்டார். திருமணத்திற்கு வரதட்சணையாக கூடை கூடையாக பணம் கொடுக்க எனக்கு யாரும் இல்லை. எல்லோருக்கும் பணம் மட்டும் தான் வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொடுமைக்கு உள்ளான பெண்; கலங்கி நிற்கும் குடும்பம் - சிக்கிய அ.தி.மு.க நிர்வாகி 

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Woman complaints against  AIADMK executive, alleging issue dowry

அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கந்தன். இவரது மகன் கே.பி.கே.சதீஸ்குமார். இவர், சென்னை பெருநகர மாநகராட்சியின் 182 வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவருக்கும் அம்பத்தூரைச் சேர்ந்த ஸ்ரீ காந்த் என்பவரது மகள் ஸ்ருதி பிரியதர்ஷினிக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தின் போது சுமார் 600 சவரன் தங்கம், வெள்ளி நகைகள், 2 சொகுசு கார்கள் ஆகியவை கே.பி.கந்தன் குடும்பத்தினருக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தம்பதியர் ஆரம்பகாலத்தில் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், கடந்த சில மாதங்களாக இந்தத் தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்தக் கருத்து வேறுபாடு வரதட்சனை காரணமாக ஏற்பட்டுள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகார் மனுவில், என் பெயர் ஸ்ரீகாந்த் . எனக்கு 58 வயது ஆகிறது. நான் அம்பத்தூரில் மரக்கடை வைத்து வியாபாரம் செய்கிறேன். கட்டுமானத் தொழிலும் செய்து வருகிறேன். என் மகள் ஸ்ருதி பிரியதர்ஷினி மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணம் செய்ய வேண்டி வரன் பார்க்கும்பொழுது அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.பி. கந்தன் அவருடைய மகன் கே.பி.கே. சதீஷ்குமார் வரன் சம்பந்தமாக என்னிடம் தொடர்பு கொண்டார்கள். இருவீட்டாரும் பேசி சம்மதித்து திருமணம் முடிவானது. கே.பி.கந்தன் மற்றும் அவருடைய மனைவி சந்திரா சார்பாக நிறைய நபர்கள் வருவார்கள். அதனால் திருமண நிச்சயதார்த்தம் கிண்டியில் உள்ள பிரபல சொகுசு விடுதியில் நடத்த வேண்டும் என்றும், நிச்சயதார்த்தத்திற்கு மண மகனுக்கு ரேடோ வாட்ச், வைர பிரேஸ்லட், தங்க செயின், வைர மோதிரம் போட வேண்டும் என்றும் திருமணத்திற்கு பெண்ணிற்கு குறைந்த பட்சம் 1000 சவரன் தங்க நகைகளும் மாப்பிள்ளைக்கு 100 சவரன் தங்க நகைகளும் இரண்டு விலை உயர்ந்த கார்களும் வரதட்சணையாகவும், அதனைத் தொடர்ந்து திருமணம் அடையாரில் உள்ள ராமசந்திர கன்வென்சன் சென்டர்-ல் நடத்த வேண்டும் என்றும் நிர்பந்தித்தனர். 

நான் 1000 சவரன் தங்க நகை மட்டும் என்னால் செய்ய முடியாது என்றும், பெண்ணுக்கு 500 சவரனும், மாப்பிள்ளைக்கு 100 சவரனும் வரதட்சணையாக தருகிறேன் என்றும், மற்றவைகள் அவர்கள் வரதட்சணையாக கேட்டபடி செய்கிறேன் என்று தெரிவித்த பின்பு கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி நிச்சயதார்த்தமும், ஏப்ரல் 25 ஆம் தேதி திருமணமும் நடந்தது. கே.பி. கந்தன் வரதட்சணையாக கேட்டபடி ஆடி கார் மற்றும் பி.எம்.டபில்யூகார் அதன் மதிப்பு 1.65 கோடி மற்றும் தங்க நகை 600 சவரன், வெள்ளி 20 கிலோ ஆகியவைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டு சீர்வரிசையாக கட்டில், பீரோ மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை கொடுத்தேன் என்று அந்த மனுவில் கூறியுள்ளார். 

இவ்வாறு திருமணம் பற்றி விபரமாக கூறியிருக்கும் ஸ்ரீகாந்த், திருமணம் நடந்த பிறகு சிறிது காலம் மாப்பிள்ளையும், என் மகளும் சந்தோஷமாகத் தான் இருந்தார்கள். அதன் பிறகு அதே வீட்டில் கணவருடன் வசிக்கும் மாப்பிள்ளையின் சகோதரி இந்துமதி, மாப்பிள்ளையின் அம்மா ஆகியோர் திருமணத்திற்கு வரதட்சணையாக கேட்ட 1000 சவரன் நகையை போடவில்லை என்று என் மகளை வார்த்தையால் கொடுமைப் படுத்தியுள்ளனர். இவர்களின் கொடுமை தாங்காமல் என் மகள் என்னிடம் பலமுறை நேரில் வரும் பொழுதும் தொலைபேசியின் வாயிலாகவும் தெரியப்படுத்தியுள்ளார். நான் இதை கே.பி. கந்தனுக்கு தெரியப்படுத்தி என் மகளைப் பார்த்துக் கொள்ளுமாறும், கொடுமைப் படுத்த வேண்டாம் என்றும் நீங்கள் கேட்ட நகைகளை கொடுத்து விடுகிறேன் என்றும் கூறியிருந்தேன். என் மகளின் ஆடி மாதத்தின்போது மாப்பிள்ளை, அம்மா வற்புறுத்தலின் பேரில் என் மகளுக்கு வைரத்தில் தாலி செயினும், மாப்பிள்ளைக்கு வெள்ளியில் சாப்பிடும் தட்டு, டம்ளர் ஆகியவைகளையும் கொடுத்தேன். என் மகளின் முதல் திருமணம் நாள் அன்று என் மருமகனுக்கு ஒரு பெல்ட் அன்பளிப்பாக கொடுத்தேன். அவர் ஏன் தங்க நகை கொடுக்கவில்லை என்று என் மகளை அடித்து தகராறு செய்தார். அந்த சமயம் என் மகள் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் என் மகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்தது பெண் குழந்தை என்பதால் என் மகளின் கணவர் வீட்டில் யாருக்கும் சந்தோஷம் இல்லை. அதை காரணமாக வைத்து என் மருமகன், அவருடைய அம்மா, தங்கை பலமுறை வார்த்தையால் கொடுமைப்படுத்தி என் மகள் தற்கொலை செய்து கொள்ள முயலும் அளவிற்கு கொடுமை செய்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து, நான் மாப்பிள்ளையின் தந்தை கே.பி.கந்தனிடம் கூறியபோது, அவர் அவரின் வீட்டாரை கண்டிக்காமல் என் மகளை மிரட்டி இங்கு நடப்பதை எல்லாம் ஏன் உன் தந்தையிடம் சொல்கிறாய்? இன்னொரு முறை உன் தந்தை என்னிடம் பஞ்சாயத்திற்கு வந்தால் உன் குடும்பத்தையே அடியோடு ஒழித்து விடுவதாக கூறியதாக என் மகள் என்னிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்தார். இதன் பிறகு மே மாதம் 2021-ல் என் மகளை என் மகளின் கணவர், மாமியார், என் மகள் கணவரின் சகோதரி இந்துமதி ஆகியோர் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவரை மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்லாமல் எங்கே அழைத்து சென்றால் புகார் ஆகி விடுமோ என்று என் மகளின் கணவரின் சகோதரி இந்துமதி மருத்துவர் என்பதால் அவரே மருத்துவம் பார்த்து மருந்து கொடுத்துள்ளார். இந்நிலையில் என் மகளையும், குழந்தையையும் 2021 ஆம் வருடம் மே மாதம் 9 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டதன் காரணத்தினால் என் மகள் Cab மூலமாக என் வீட்டிற்கு வந்துவிட்டார். என் மகளை சேர்த்து வைக்க கே.பி.கந்தனிடம் நான் பலமுறை பேசியும் எந்த பலனும் இல்லை. அவர்கள் விவாகரத்து வேண்டி பொய்யான தகவலை சேர்த்து வழக்கு தொடுத்து அது குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. என் மகளை வீட்டை விட்டு அவர்கள் அனுப்பும்போது அவருடைய துணி மற்றும் நகைகள், செல்போன் ஆகியவைகளை மாப்பிள்ளையின் வீட்டிலேயே வைத்துவிட்டார்.

இந்நிலையில் என் மாப்பிள்ளை என் மகளின் அலைபேசியை உபயோகித்து அதில் உள்ள இன்ஸ்டாகிராமில் என் மகள் மருத்துவம் படிக்கும்போது அவரின் வகுப்பு தோழருடன் பேசியதை எல்லாம் எடுத்து என் மகளை அவமான படுத்த வேண்டி என் மகள் பிரிந்து இரண்டு வருடம் கழித்து தற்பொழுது இந்த சங்கதிகளை ஒரு மனுவாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததோடு அல்லாமல் என்னுடைய உறவினர்களுக்கும் தெரியப்படுத்தி எங்கள் நன் மதிப்பை களங்கப்படுத்தியுள்ளார்கள். என் மகள் சேர்ந்து வாழவேண்டும் என்பதனால் நான் இது நாள் வரை என் மருமகன் சதீஷ்குமார் என் மருமகனின் தந்தை கே.பி. கந்தன், தாயார் சந்திரா, சகோதரி இந்துமதி ஆகியோர் மேல் எந்த வித புகாரும் காவல் நிலையத்திலோ, நீதிமன்றத்திலோ தெரிவிக்காமல் இருந்தேன். தற்போது நான் கே.பி. கந்தனிடம் நேரிடையாக சென்று இது குறித்து கேட்டேன். அப்போது பேசிய அவர், என் பெண்ணிற்கு மேலும் 500 சவரன் நகை தர வேண்டும் என்றும், அவரின் மகனின் வியாபாரத்திற்கு 10 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், தான் கேட்டதை தரவில்லை என்றால் உன் மகள் வாழமுடியாது என்றுக் கூறி என்னை மிரட்டி அனுப்பிவிட்டார்.

என் மகளை வரதட்சணை கொடுமை செய்து வாழவிடாமல் என் வீட்டிற்கு அனுப்பிவிட்ட சதீஷ்குமார், அவரின் தந்தை கே.பி.கந்தன், தாயார் சந்திரா, அவருடைய மகள் இந்துமதி ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.கந்தன் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தனது மகளை கொடுமைப்படுத்தியதாக புகார் கொடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இது குறித்து விரைவில் விசாரணை தொடங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

Next Story

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் வெட்டிக் கொலை; விசாரணையில் திடுக் தகவல்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Marxist communist figure passed away in kerala

கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் செருவட்டூர் எனும் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியநாதன் (62). இவர், கொயிலாண்டி நகர மத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின், உள்ளூர் கமிட்டி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். 

இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் (22-02-24) செருவட்டூர் அருகே முத்தாம்பி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்ற திருவிழாவுக்கு பங்கேற்பதாக சென்றார். இதனையடுத்து, அன்று இரவு நடந்த இசை நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு மர்ம கும்பல், தாங்கள் கொண்டுவந்த ஆயுதத்தால் சத்தியநாதனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில், படுகாயமடைந்த சத்தியநாதன், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள், சத்தியநாதனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கல், சத்தியநாதன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சத்தியநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில்,  அபிலாஷ் (30) என்ற நபர், இந்த கொலை சம்பவத்தில் தான் ஈடுபட்டதாக காவல்துறையிடம் சரண் அடைந்தார். அவரை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அபிலாஷ் கொயிலாண்டி நகராட்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து, அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்த போது, அவரை ஓட்டுநர் வேலையில் இருந்து நீக்கி கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் அபிலாஷுக்கு ஆதரவாக சத்தியநாதன் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆத்திரமடைந்த அபிலாஷ், சத்தியநாதனை கொலை செய்துள்ளதாக காவல்துறையினருக்கு தெரியவந்தது. 

இந்த சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்து, கொயிலாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (23-02-24) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தியது. இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது. கேரளாவில் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.