நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று (12/09/2021) பிற்பகல் 02.00 மணிக்கு நடக்கிறது. கரோனா ஊரடங்கு காரணமாக, தள்ளிவைக்கப்பட்ட நிலையில் நீட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெறவுள்ளது.
கரோனா காரணமாக, மாணவர்களின் நலன் கருதி நீட் நுழைவுத் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது. தமிழ், மலையாளம், பஞ்சாபி மொழிகள் முதன்முறையாக சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடக்கிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து 1,12,889 பேர் உள்பட நாடு முழுவதும் 16 லட்சம் பேர் நீட் நுழைவுத் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து 41,144 மாணவர்கள், 71,745 மாணவிகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் மொத்தம் 224 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழில் தேர்வு எழுதுவதற்காக 12,899 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், அதில் 11,236 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.