Skip to main content

"சமாஜ்வாதி கட்சியிடம் இருந்து பாதுகாப்பு தர வேண்டும்" - உ.பி அரசுக்கு மாயாவதி கோரிக்கை

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Mayawati's request to UP Government

உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், உத்தர பிரதேசத்தில் பிரதான எதிர்கட்சிகளான அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரு கட்சிகள் இடையே சாதிய ரீதியிலான மோதல் போக்கு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், தன் கட்சி அலுவலகத்தை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற உதவ வேண்டும் என உத்தர பிரதேச அரசுக்கு மாயாவதி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து மாயாவதி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சமாஜ்வாதி கட்சி பிற்படுத்தப்பட்டோருக்கான கட்சி மட்டுமல்ல, தலித் மக்களுக்கு எதிரான கட்சியும் கூட. கடந்த பொதுத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்த போது, சமாஜ்வாதி கட்சியின் தலித் விரோத உத்திகள் மற்றும் குணத்தை பகுஜன் சமாஜ் கட்சி மாற்ற முயற்சித்தது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு, சமாஜ்வாதி கட்சி மீண்டும் தனது தலித் விரோத உத்தியை கொண்டு வந்தது. 

இப்போது சமாஜ்வாதி கட்சித் தலைவர் யாருடன் கூட்டணி பற்றி பேசினாலும், அவரது முதல் நிபந்தனை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று ஊடகங்களில் பரவலாக விளம்பரப்படுத்தப்படுகிறது. கடந்த 1995ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது, எங்கள் கட்சி அலுவலகத்தின் மீதும், எனது வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தினர். தண்ணீர், மின்சாரம் போன்றவையும் துண்டிக்கப்பட்டன. 

பகுஜன் சமாஜ் மாநில அலுவலகம் மற்றும் ஊழியர்களுக்கு சில தீய சக்திகளால் அச்சுறுத்தல் ஏற்படுகின்றன. இந்த பாதுகாப்பின்மையைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு ஆலோசனைகளின் பேரில், கட்சித் தலைவர்கள் இப்போது பெரும்பாலான கட்சிக் கூட்டங்களை அவர்களது இல்லத்தில் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதேசமயம் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் பெரிய கூட்டங்களில், கட்சித் தலைவர்கள் அங்கு சென்றதும், பாதுகாப்புப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்படுகின்றது.

இதுபோன்ற சூழ்நிலையில், தற்போதைய கட்சியின் மாநில அலுவலகத்திற்கு பதிலாக வேறு எங்காவது பாதுகாப்பான இடத்தில் ஏற்பாடுகளை செய்யுமாறும், இல்லையெனில் எந்த நேரத்திலும் இங்கு அசம்பாவிதம் நிகழலாம் என்றும் உ.பி. அரசுக்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சி சிறப்பு வேண்டுகோள் விடுக்கிறது. மேலும், தலித் விரோதப் போக்கை அரசு கடுமையாகக் கையாள வேண்டும் என்றும் கட்சி கோருகிறது" என்று பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

எம்.பிக்கு அறை விட்ட பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Bahujan Samaj Party executive leaves room for MP in maharashtra

மகாராஷ்டிரா  மாநிலத்தைச் சேர்ந்தவர் கவுதம். இவர், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (17-07-24) தாதர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 

அந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை எம்.பி கவுதம் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அப்போது, அக்கட்சியைச் சேர்ந்த நிமா மோஹர்கர் என்ற பெண், எம்.பி கவுதமை அறைந்தார். இதனால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இது தொடர்பாக தாதர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தியதில், சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பண்டாரா-கோண்டியா தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பு கிடைக்காததால் பிஎஸ்பி தொண்டரான நிமா மோஹர்கர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர், எம்.பி கவுதமை தாக்கியதாகத் தெரியவந்துள்ளது. 

இந்தச் சம்பவத்தின் வீடியோ வைரலானதால், மொஹர்கர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் சுனில் டோங்ரே கூறுகையில், ‘கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மொஹர்கர் போட்டியிட்டார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியவில்லை. மக்களவைத் தேர்தலில் அவர் வலுவான வேட்பாளராக இருப்பார் என்பதில் கட்சிக்கு உறுதியாக தெரியவில்லை. அதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் இவ்வாறு நடந்துகொள்வதை ஏற்க முடியாது. அவர் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், மேலும் அவர் மீது தாதர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். 

Next Story

யோகி ஆதித்யநாத்தின் முதல்வர் பதவிக்கு ஆபத்து?; பரபரக்கும் உ.பி

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Yogi Adityanath's Chief Ministership in Danger

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில், 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதிக பெரும்பான்மை இல்லாவிட்டாலும், கூட்டணி கட்சி ஆதரவால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். 

இந்தத் தேர்தலில் பா.ஜ.கவின் கோட்டையாக இருக்கக்கூடிய உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களைக் கூட காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது. அந்த வகையில், மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதில் பா.ஜ.க வெறும் 33 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. அதிலும், ராமர் கோவில் கட்டப்பட்ட இடமான ஃபைசாபாத் தொகுதியில் கூட பா.ஜ.க படுதோல்வியடைந்திருந்தது. பா.ஜ.க பெரிதும் நம்பியிருந்த தொகுதியில் தோல்வியடைந்தது என்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடவையாக பார்க்கப்பட்டது. 

இதனிடையே, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும், துணை முதல்வர் கே.பி.மெளரியாவுக்கும் இடையே கடுமையான மோதல் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இந்தச் சூழலில் தான், கே.பி.மெளரியா நேற்று முன்தினம் (16-07-24 பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டாவைச் சந்தித்துப் பேசினார். அதனை தொடர்ந்து, உ.பி பா.ஜ.க மாநிலத் தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இந்தப் பரப்பரப்பான சூழ்நிலையில், உ.பி அமைச்சரவையை நேற்று (17-07-24) யோகி ஆதித்யநாத் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் கே.பி மெளரியா கலந்து கொள்ளவில்லை. 

இந்த நிலையில், துணை முதல்வர் மெளரியா தனது எக்ஸ் பக்கத்தில் டிவீட் ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “அரசை விட கட்சி தான் பெரியது. தொண்டர்களின் வலி எனக்கும் வலி. கட்சியை விட பெரியவர்கள் யாரும் இல்லை. தொண்டர்களே பெருமை” எனக் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க தலைவர்களை சந்தித்த பிறகு, மெளரியா வெளியிட்ட இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தப் பதிவின் மூலம் யோகி ஆதித்யநாத் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தச் சூழலில், உ.பி ஆளுநர் ஆனந்திபென் பட்டேலை நேற்று இரவு யோகி ஆதித்யநாத் சந்தித்து பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.