மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் பழங்குடியின தொழிலாளி மீது பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த வீடியோ சமுக வலைதளங்களில் பரவியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பாஜக நிர்வாகியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.
அந்த வகையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி புல்டோசர் மூலம் பிரவேஷ் சுக்லா வீட்டை இடித்து தள்ள நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா மீது தேசிய பாதுகாப்பு சட்டம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பிரவேஷ் சுக்லா அரசு நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வீட்டை கட்டியிருந்தது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சித்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரவேஷ் சுக்லா வீடு புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பிரவேஷ் சுக்லாவுக்கு மத்தியப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ. கேதார்நாத் சுக்லா மற்றும் பல பாஜக நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.