இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் எழுந்து, தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. அதேநேரம் ஜூன் மாதம் நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு சர்ச்சைகள் காரணமாக தேர்வுநாள் மாற்றப்பட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.
முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாளும் முன்கூட்டியே கசிந்ததாக மீண்டும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது மாணவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதுநிலை நீட் தேர்வு நடைபெற இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் முன்கூட்டியே தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. 'NEET PG Leaked Materials' என்ற பெயரில் டெலிகிராம் சேனல் ஒன்று செயல்படுவதாகவும், அதில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எடுத்துள்ளது.
ரூபாய் 70 ஆயிரம் வரை வினாத்தாளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டெலிகிராம் குழுவில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளது. டெலிகிராம் செயலியில் இதுபோல் நூற்றுக்கணக்கான சேனல்களில், நீட் வினாத்தாள் வழங்கப்படும் என்ற தகவல்கள் பகிரப்படுவது முறையாக தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இதனை முற்றிலுமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் தேசிய தேர்வு வாரியம் விளக்கம் வெளியிட்டுள்ளது. 'டெலிகிராம் சேனலில் முதுநிலை நீட் வினாத்தாள் வெளியானது போன்ற போலி செய்திகளை நம்ப வேண்டாம். தேர்வுகளை ஏமாற்றும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள தகவல் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும்' என தெரிவித்துள்ளது.
அதேநேரம் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற உள்ள முதுகலை நீட் தேர்வை ஒத்திவைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்வு மையங்களை முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.