மாருதி சுசூகி நிறுவனம் தனது விட்டாரா ப்ரீஸா மாடல் காரின் உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
2018-19 நிதியாண்டின் முதல் ஏழு மாதத்தில் (ஏப்ரல் முதல் அக்டோபர்) 10% வரை அதன் உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் சந்தை மற்றும் விற்பனை துறையின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ் கல்சி (R S Kalsi) கூறுகையில் “சுசூகி மோட்டாரின் குஜராத் தொழிற்சாலயில் 2.5 இலட்சம் கார்களை ஒரு வருடத்திற்கு உற்பத்தி செய்யும் அளவிற்கு வசதி உள்ளது. அதன் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்துகிறோம். மேலும் இனி வாடிக்கையாளர்கள், காரை புக் செய்துவிட்டு அதிக நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த நிதி ஆண்டில் மாருதி சுசூகி நிறுவனம் 1.48 இலட்சம் விட்டாரா ப்ரீஸா மாடல் கார்களை விற்பனை செய்துள்ளது. மேலும் 2018-19 நிதியாண்டின் முதல் ஏழு மாதத்தில் 95,000 விட்டாரா ப்ரீஸா கார்கள் விற்பனையாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.