இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அந்த மாநிலத்தின் பழங்குடி சமூகத்தினரான குக்கி மற்றும் நாகா இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், கடந்த மே மாதம் 3 ஆம் தேதி முதல் மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த வன்முறைச் சம்பவங்களால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் உச்ச நீதிமன்றம் மணிப்பூர் வன்முறை தொடர்பாக தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணையின் போது மணிப்பூர் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் முன்னாள் நீதிபதிகள் ஷாலினி ஜோஷி, ஆஷா மேனன் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு அமைத்து, மணிப்பூரில் நிவாரணப் பணிகளைப் பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, இழப்பீடு வழங்குவது குறித்து குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழு உச்ச நீதிமன்றத்தில் தங்களது 3 அறிக்கைகளை தாக்கல் செய்தது. இதையடுத்து இந்த குழுவுக்கான நிர்வாக உதவி, நிதிச் செலவுகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும். மணிப்பூர் வழக்கில் அமைக்கப்பட்ட குழுவின் வேலைகளை எளிதாக்க 25 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும். கிதா மிட்டல் குழு தாக்கல் செய்த அறிக்கைகள் வழக்கின் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.