2009ம் ஆண்டு இயக்குநர் கொடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அருந்ததி. இப்படத்தில் அனுஷ்கா, சோனுசூட், மனோரமா மற்றும் பலர் நடித்திருப்பர். இப்படத்தின் வில்லன் சோனு சூட் "அடியே அருந்ததி" எனக் கூறும் வசனம் மிகப் பிரபலம். மறுபிறவி எடுத்து வில்லனை அனுஷ்கா அழிப்பதுபோல் இக்கதைக் களம் அமைந்து இருக்கும்.
இத்திரைப்படத்தைப் பார்த்து தானும் மறுபிறவி எடுக்கவேண்டும் எனக் கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூர் கொண்டவாடி பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா பிரசாத். 22 வயதான இவர் பி.யு.சி 2ம் ஆண்டு படித்து வருகிறார். திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் அருந்ததி திரைப்படத்தை 100 முறைக்கும் மேல் பார்த்துள்ளார். அப்படத்தில் வில்லனின் கொடுமைகளைத் தாங்காது தேங்காய்களைத் தலையில் உடைத்து கடவுளுக்குப் பூஜை செய்து முக்தி பெற்று மறுபிறவியில் சக்தி பெற்றவராக அனுஷ்கா மீண்டும் வருவது போல் காட்சிகள் இடம் பெற்று இருக்கும். அப்படத்தால் கவரப்பட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டால் அடுத்த பிறவியில் மிகுந்த சக்தி மிக்கவராகப் பிறக்கலாம் என்ற நோக்கில் ரேணுகா பிரசாத் என்னும் பெயர் கொண்ட கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் உடம்பில் பெட்ரோலை ஊற்றி பற்றவைத்துக்கொண்டார். வலிதாங்காமல் ரேணுகா பிரசாத் அலற அவரது தந்தை செய்வது அறியாமல் தலையில் அடித்துக்கொண்டு அழுதுள்ளார் . அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவரை மீட்டு மதுகிரியில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். முதல் உதவி அங்கு அளிக்கப்பட்ட பின் பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சிகிச்சை பலனின்றி ரேணுகா பிரசாத் உயிரிழந்தார்.
இந்நவீன காலத்திலும் சினிமா வேறு நிஜம் வேறு என்பதை அறியாமல் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியையும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.