மராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள குருஷ்ணர் கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது வாலிபர். இவர் காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இவர் உடல்நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதால் ஹேமல்காசா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையில், மருத்துவமனை இருக்கும் நகர்ப்பகுதியில் இருந்து தொலைவில் உள்ள குருஷ்ணர் கிராமத்துக்கு அவரது உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, அந்த வாலிபரின் குடும்பத்தினர் அவரது உடலை மோட்டார் சைக்கிள் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து, வாலிபரின் உடலை மரக்கட்டிலில் வைத்துக் கட்டினர். அதன் பின்னர், அவர்கள், வாலிபர் உடல் வைக்கப்பட்ட கட்டிலை மோட்டார் சைக்கிளின் பின்புறம் வைத்து சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர்.
ஆம்புலன்ஸ் கிடைக்காததால் மோட்டார் சைக்கிளில் வாலிபர் உடல் எடுத்துச் செல்லப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் வாலிபரின் உடலை ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்ல வாலிபரின் குடும்பத்தினர், நகராட்சி நிர்வாகம் அல்லது சுகாதாரத்துறையைத் தொடர்பு கொள்ளவில்லை என கட்சிரோலி மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் பேசிய அவர், “தனியார் மருத்துவமனையில் இருந்து வாலிபரின் உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அதைக் கவனித்து உள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக தாலுகா சுகாதரத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலின் பேரில், உடனடியாக அந்தப் பகுதிக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ஆம்புலன்ஸில், வாலிபரின் உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வழக்கமான நடைமுறைகள் முடிக்கப்பட்டது. அதன் பிறகு, உடல் சுமார் 17 கி.மீ. தொலைவில் இருந்த வாலிபரின் சொந்த ஊரான குருஷ்ணர் கிராமத்திற்கு இறுதிச் சடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டது.” என்று கூறினார்.