உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று(22.1.2024) ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். அதன் பிறகு, கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராம்லீலா நிகழ்ச்சி மற்றும் ராமர் பஜனைகள் நடைபெற்றது. அந்த வகையில், ஹரியானா மாநிலம் பிவானியில் ராம் லீலா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில், ஹனுமான் வேடம் அணிந்து நடித்த ஹரிஷ் மேத்தா, நாடகம் நடித்துக்கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆனால் இதனை ராம லீலா நாடகத்தின் இரு பகுதி என்று கருதிய மக்கள் அவரை காப்பாற்ற முன்வராமல் வேடிக்கை பார்த்துள்ளனர். பின்னர் ஹரிஷ் மேத்தா நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த மக்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஹரிஷ் மேத்தா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.