இந்திய தேர்தல் ஆணையத்தின் தடை உத்தரவால் பிரச்சாரக் கூட்டங்களை மம்தா இரத்து செய்துள்ளார்.
இந்தியாவில் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வருட இறுதியில் இருந்து கட்டுக்குள் இருந்து வந்த கரோனா பரவல், இந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் தீவிரமாகி வருகிறது. மேற்கு வங்கத்திலும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு கிட்டத்தட்ட 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மேற்கு வங்கத்தின் கரோனா அதிகரிப்புக்கு, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. மேற்கு வங்கத்தில் ஆறு கட்ட தேர்தல்கள் முடிந்து, இரண்டு கட்ட தேர்தல்கள் மீதமிருக்கும் நிலையில், மாநிலத்தில் கரோனா அதிகரித்து வருவது குறித்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், கரோனா பரவல் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்தியது.
இதனையடுத்து தேர்தல் ஆணையம், மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சியினரின் ஊர்வலங்கள், நடைபயணங்கள், பேரணிகள் உள்ளிட்டவற்றுக்கு தேர்தல் ஆணையம் நேற்று (22.04.2021) தடை விதித்தது. 500 நபர்கள் வரை பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டங்களுக்கு மட்டுமே அனுமதி என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து மம்தா, தனது அனைத்து பிரச்சாரக் கூட்டங்களையும் இரத்து செய்துள்ளார். மேலும் காணொளி, இணையம் வாயிலாக மக்களை சந்திக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.