உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை வைத்து பா.ஜ.க வித்தை காட்டி வருகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று (09-01-24) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, “மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் நம்பிக்கை இல்லை. ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அனைத்து சமூகத்தினரையும் இணைக்கக் கூடிய பண்டிகைகள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
மற்ற சமூகங்களை ஒதுக்கி வைக்கும் விழாக்களை நான் ஆதரிப்பதில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், ராமர் கோவில் திறப்பு விழாவை பா.ஜ.க நடத்துகிறது. ஆனால், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவை வைத்து பா.ஜ.க வித்தை காட்டி வருகிறது” என்று தெரிவித்தார்.