Skip to main content

கரோனா தடுப்பூசி; உச்ச நீதிமன்றத்தை நாடிய மம்தா அரசு

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

mamata

 

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்த பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, கடந்த மே ஒன்று முதல் 18 - 44 வயதானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தவும், மாநிலங்கள் தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து நேரடியாக தடுப்பூசி வாங்கவும் மத்திய அரசு அனுமதியளித்தது. இதனைத்தொடர்ந்து, தடுப்பூசி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ஒரு விலையையும், மாநில அரசுக்கு ஒரு விலையையும், தனியாருக்கு ஒரு விலையையும் நிர்ணயித்துள்ளன.

 

இந்தநிலையில், கரோனா காலத்தில் மக்களுக்கு ஆக்சிஜன், தடுப்பூசி உள்ளிட்டவற்றை வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்துவருகிறது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின்போது, தடுப்பூசி விலையைத் தடுப்பூசி நிறுவனங்களே நிர்ணயிக்க அனுமதிக்க முடியாது எனவும், மத்திய அரசு தடுப்பூசி கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது.

 

இதன்தொடர்ச்சியாக, இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. இந்தநிலையில், மேற்குவங்க அரசு, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக பிரமாண பாத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் மேற்கு வங்க அரசு, பொதுவான கரோனா தடுப்பூசி கொள்கை வேண்டுமென்றும், மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியாருக்குத் தனித் தனி விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதை நீக்க வேண்டுமென்றும் கூறியுள்ளது. மேலும் மேற்கு வங்க அரசு அந்த மனுவில், கரோனா தடுப்பூசி மாநிலங்களுக்கு இலவசமாக தரப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.

 

மம்தா பானர்ஜி ஏற்கனவே, இந்தியர்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நீதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காங்கிரசிற்கு ஒரு வாக்குக்கூட கிடைக்காது” - மம்தா பானர்ஜி அதிரடி பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Mamata Banerjee speech on Congress won't get a single vote in west bengal

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொண்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்றது. வரும் 26ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. 

அதன்படி, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று (24-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “மேற்கு வங்கத்தில் 26,000 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்களிடமிருந்து அல்ல, எந்த அரசாங்க ஊழியரிடமிருந்தும் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது. உச்சநீதிமன்றத்தில் இருந்து நீதி கிடைக்கும் என இன்னும் நான் நம்புகிறேன்.

பாஜக உயர் நீதிமன்றத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். சி.பி.ஐயை விலைக்கு வாங்கியுள்ளனர். என்.ஐ.ஏ.வை வாங்கியுள்ளனர். பி.எஸ்.எப்-ஐ விலைக்கு வாங்கியுள்ளனர்.  தூர்தர்ஷனின் நிறத்தை காவி நிறமாக்கி விட்டார்கள். அதில், பாஜக மற்றும் மோடியைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். அதைப் பார்க்காதீர்கள். புறக்கணிக்க வேண்டும்” என்று கூறினார். 

Next Story

ராம நவமி ஊர்வலத்தில் கலவரம்; பா.ஜ.க கடும் குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJP strongly accused on mamata banerjee on Riots at Ram Navami Procession

நாடு முழுவதும் நேற்று (17-04-24) ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத்தின் சக்திபூர் பகுதியில் ராம் நவமி உத்சவ் உஜ்ஜபன் கமிட்டி சார்பாக நேற்று ஊர்வலம் நடத்தினர். அப்போது, அந்த ஊர்வலத்தின் மீது சிலர் வீட்டின் மாடிகளில் இருந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது, 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கல்வீச்சு தாக்குதல் நடந்த அந்த பகுதிக்கு விரைந்த போலீசார், அங்கிருந்த கும்பல்களை கலைக்க தடியடி நடத்தியும், புகை குண்டுகளை வீசியும் நிலைமையை தன் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து, கலவரம் நடந்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராம் நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியே காரணம் என்று அங்குள்ள பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மேற்கு வங்க பா.ஜ.க மாநிலத் தலைவர் சுவேந்த அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ கடந்த ஆண்டு ஸ்ரீராம நவமி ஊர்வலங்கள் தல்கோலா, ரிஷ்ரா மற்றும் செரம்பூர் ஆகிய இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானது போல், ​​இந்த ஆண்டும் மம்தா காவல்துறை ராம பக்தர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.

நிர்வாகத்திடம் இருந்து உரிய அனுமதி பெற்ற அமைதியான ராம நவமி ஊர்வலம், சில குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், மம்தாவின் காவல்துறை  குற்றவாளிகளுடன் சேர்ந்து, ஊர்வலம் திடீரென முடிவடைவதை உறுதி செய்வதற்காக ராம பக்தர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளது. இது மட்டுமின்றி, மாணிக்யஹார் மோரில் உள்ள சனாதானி சமூகத்தைச் சேர்ந்த கடைகளை  கொள்ளையடிப்பதையும் மம்தாவின் காவல்துறை தடுக்க முடியவில்லை. 

ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு மம்தா பானர்ஜியே காரணம். அவரின் ஆத்திரமூட்டும் பேச்சின் காரணமாகவே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ராம நவமி ஊர்வலங்கள் சீர்குலைக்கப்பட்டன். எனவே, மேற்கு வங்கத்தில் மத விழாக்களை அமைதியான மற்றும் குற்றச் சம்பவங்கள் இல்லாமல் கொண்டாட, மாநில அரசு மாற்றப்பட வேண்டும். மேலும், ராம பக்தர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.