Skip to main content

ஜனாதிபதி விருந்தில் மம்தா பானர்ஜி பங்கேற்பு!

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Mamata Banerjee Attends President's Dinner

 

ஜி20 உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். 

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி - 20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

 

ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு செப்டம்பர் 9 ஆம் தேதி விருந்து அளிக்கிறார். ஜனாதிபதி திரெளபதி முர்மு சார்பில் வழங்கப்படும் இரவு விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்கள், உள்நாட்டுத் தலைவர்கள் எனப் பலர் பங்கேற்க உள்ளனர். அதற்காக ஜனாதிபதி மாளிகை சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பிதழில் ‘இந்திய ஜனாதிபதி’ என்று குறிப்பிடுவதற்குப் பதில் ‘பாரத ஜனாதிபதி’ என்று குறிப்பிட்டிருந்தது. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் கொடுத்தது என்று கூறி, அசாம் முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலரும் பாரத் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

 

இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் ஜி20 விருந்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜனாதிபதி திரெளபதி முர்முவின் அழைப்பின் பேரில் மம்தா பானர்ஜி இந்த விருந்தில் கலந்துகொள்ளப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ஜி-20’ மாநாட்டில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்திக்கவும், அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகவும் இரவு விருந்தில் கலந்துகொள்ளும் முடிவை மம்தா பானர்ஜி எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

எமர்ஜென்ஸி குறித்து மக்களவையில் ஜனாதிபதி உரை; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Opposition parties strongly protest on President's Speech in Lok Sabha

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, நேற்று (26-06-24) நடைபெற்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் ஓம் பிர்லா, சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, இன்று (27-06-24) குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாடாளுமன்றத்திற்கு வந்து உரையாற்றினார். அப்போது அவர், “இன்னும் சில மாதங்களில் இந்தியா குடியரசு நாடாக 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்திய அரசியலமைப்பு கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு சவாலையும், ஒவ்வொரு சோதனையையும் தாங்கி நிற்கிறது. அரசியலமைப்புச் சட்டம் உருவாகும் போது கூட, இந்தியா தோல்வியடைய வேண்டும் என்று விரும்பும் சக்திகள் உலகில் இருந்தன. அரசியல் சட்டம் அமலுக்கு வந்த பிறகும் பலமுறை தாக்கப்பட்டது. இன்று ஜூன் 27. ஜூன் 25, 1975 அன்று அமல்படுத்தப்பட்ட அவசரநிலை, அரசியலமைப்பின் மீதான நேரடித் தாக்குதலின் மிகப்பெரிய இருண்ட அத்தியாயமாகும். அப்போது, ஒட்டுமொத்த நாடும் கோபமடைந்தது. ஆனால், குடியரசின் மரபுகள் இந்தியாவின் மையத்தில் இருப்பதால், அத்தகைய அரசியலமைப்புக்கு எதிரான சக்திகளை எதிர்த்து நாடு வெற்றி பெற்றது” என்று பேசினார். 

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நிகழ்த்திய உரை, பா.ஜ.க அரசு எழுதிக் கொடுத்த பொய்களாக நிரம்பியுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், திரி்ணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி மஹுவா மொய்த்ரா செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘303ல் இருந்து 240க்கு வந்திருப்பதை அவர்களால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் பா.ஜ.க அரசாங்கத்தின் பிரச்சனை. அவர்களிடம் 303 இடங்கள் இருப்பதாக நினைத்து அவர்கள் உரையைத் தயாரித்திருக்கிறார்கள். அதனால்தான் அரசாங்கம் சிறுபான்மையாக இருக்கும்போது தெளிவான பெரும்பான்மை அரசாங்கம் இருப்பதாக அவர் கூறுகிறார்” என்று கூறினார்.

அதே போல், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், “எமர்ஜென்சி காலத்தில் சிறையில் இருந்த மக்களுக்கு பா.ஜ.க என்ன செய்தது? அவர்களுக்கு மரியாதையையும் ஓய்வூதியத்தை சமாஜ்வாதி வழங்கியது. இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறுகிறது என்று கூறுகின்றனர். ஆனால், நமது விவசாயிகளை வளப்படுத்தியதா? நாம் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருந்தால், ஏன் பல இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்? ஏன் அக்னிபாத் போன்ற திட்டம்? விலைவாசி உயர்வை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?” என்று கடுமையாகப் பேசினார்.

Next Story

சுழன்று அடிக்கும் நீட் முறைகேடு; மோடிக்கு மம்தா எழுதிய திடீர் கடிதம்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
neet scam; Sudden letter written by Mamata to Modi

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கை நீக்கி புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டார். நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு எழுதிய 63 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து நேற்று தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. பீகாரில் உள்ள தேர்வு மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட நிலையில் இந்தத் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. 1563 மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற கருணை மதிப்பெண் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நீட் மறுதேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 813 பேர் நீட் மறுதேர்வு எழுதி உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

neet scam; Sudden letter written by Mamata to Modi

நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல்களால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகளால் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், 'மாணவர்கள் நலனை மனதில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு இதற்கான தேர்வுகளை நடத்துவதற்கான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். மாணவர்களின் நம்பிக்கைக்கு இது மிகவும் அவசியம். தற்போதைய நீட் தேர்வு நடைமுறை பெரும் ஊழலுக்கு இட்டுச் செல்வதாக உள்ளது.  நீட் தேர்வு நடைமுறை வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே  பயனடையச் செய்யும் வகையில் உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.