Mallikarjuna Kharge says they are Choosing weak women on women's reservation

Advertisment

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து இன்று (19.9.2022) முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று புதிய நாடாளுமன்றத்தில் முதல் அமர்வு நடைபெற்று வருகிறது.

அதே சமயம் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மாநிலங்களவையில் ஒப்புதலையும் பெற்றிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த மசோதா நிலுவையிலேயே உள்ளது. இதையடுத்து இந்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு கொண்டு வந்து மகளிர்க்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அதன் பின்னர் இந்த மசோதா குறித்து மாநிலங்களவையில் கடுமையான விவாதம் நடந்தது.

Advertisment

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா ஏற்கனவே 2010இல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அப்போது அது நிறுத்தப்பட்டது என்பதை நான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். பட்டியலின பெண்களின் கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ளது. அதனால் தான் அரசியல் கட்சிகள் பலவீனமான பெண்களைத் தேர்ந்தெடுக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. மேலும், அவர்கள், படித்த மற்றும் போராடக் கூடியவர்களை தேர்வு செய்ய மாட்டார்கள்” என்று கூறினார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “எதிர்க்கட்சித் தலைவரை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அனைத்துக் கட்சிகளும் பலனளிக்காத பெண்களைத் தேர்வு செய்கிறோம் என்று கூறியதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் எங்கள் பெண்கள் சார்பாக பேசுகிறேன். நாங்கள் அனைவரும் எங்களுடைய கட்சியாலும், பிரதமராலும் அதிகாரம் பெற்றவர்கள். குடியரசுத் தலைவரான திரெளபதி முர்முவும் அதிகாரமுள்ள பெண் தான்” என்று பேசினார்.