உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 14 குழந்தைகளுக்கு இரத்த மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 14 குழந்தைகளையும் மருத்துவர்கள் சோதனை செய்த போது அவர்களுக்கு எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ் பி, சி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரத்த தானம் மூலம் இச்சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று அதிகாரிகளின் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்திர பிரதேச மாநில எதிர்க்கட்சிகள், அரசின் அலட்சியத்தால் தான் இதுபோன்ற சம்பங்கள் நடைபெறுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், “இரட்டை இயந்திர அரசாங்கம் நமது சுகாதார அமைப்பை இரட்டிப்பாக்கியுள்ளது. உ.பி., மாநிலம் கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தலசீமியாவால் பாதிக்கப்பட்ட 14 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிக்கப்பட்டோரின் ரத்தம் செலுத்தப்பட்டிருக்கிறது. அதன் காரணமாகவே, 14 குழந்தைகளும் எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ் பி, சி போன்ற கடுமையான நோய்கள் வந்துள்ளது. இப்படி அலட்சியமாக நடந்த சம்பவம் வெட்கக்கேடானது. பாஜக அரசின் இந்த மன்னிக்க முடியாத குற்றத்திற்கு அப்பாவி குழந்தைகள் தண்டனையை அனுபவிக்க வேண்டியுள்ளது” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.