அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 17- ஆம் தேதி அன்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதில், மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். நாடு முழுவதும் உள்ள கட்சியின் மூத்த நிர்வாகிகள் வாக்குச்சீட்டு மூலம் வாக்களித்தனர். இந்நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (19/10/2022) காலை 10.00 மணிக்கு தொடங்கியது. டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில், மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகள் பெற்று அபார வெற்றிப் பெற்றுள்ளார். சசிதரூர் சுமார் 1,000 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவிய நிலையில், 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 ஆண்டுகளில் முதல் முறையாக நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.