மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் இன்று (13.02.2024) விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நேற்று (12.02.2024) மாலை சண்டிகரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்தா ராய் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.
இதனையடுத்து, விவசாய சங்கங்களுடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் திட்டமிட்டபடி விவசாயிகள் பேரணியாக சென்று இன்று (13-02-24) டெல்லியை முற்றுகையிட முடிவு செய்தனர். அதனால், டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுக்க ஹரியானா, உத்தரப்பிரதேச மாநில எல்லையில் உள்ள சாலைகளில் இரும்பு ஆணிகள், கான்கீரிட்களை கொண்டு பிரம்மாண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் டெல்லி - ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சாலையின் நடுவே பிரம்மாண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏராளமான போலீசார், துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.
விவசாயிகள் திட்டமிட்டபடி, பஞ்சாப்பில் இருந்து விவசாயிகள் தங்கள் டிராக்டர்கள் மூலம் ‘டெல்லி சலோ’ என்ற பேரணியை இன்று காலை 10 மணி அளவில் பதேகர் சாஹிப் பகுதியில் இருந்து தொடங்கி, சம்பு எல்லை வழியாக டெல்லியை நோக்கி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க, விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசினர். ஆனால், அதனை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக முன்னேறி வருகின்றனர். இந்த பேரணி காரணமாக டெல்லி - காசிப்பூர் எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “விவசாயிகளின் போராட்டத்தை கலைக்க முள்வேலி, டிரோன்களில் இருந்து கண்ணீர் புகை, ஆணிகள் மற்றும் துப்பாக்கிகள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் குரலை ஒடுக்குகிறது சர்வாதிகார மோடி அரசு.
அவருக்கு, 750 விவசாயிகளின் உயிரை பறித்தது நினைவிருக்கிறதா?. 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு அளித்த மூன்று வாக்குறுதிகளை மோடி அரசு மீறியுள்ளது. இப்போது, 62 கோடி விவசாயிகளின் குரல் எழுப்ப நேரம் வந்துவிட்டது. சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் விவசாயிகள் எழுப்பும் குரலுக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு உண்டு. நாங்கள் பயப்பட மாட்டோம். தலைவணங்க மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.