மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ரூ. 6,366 கோடி பணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்துக்கு ஒரு வருடத்தில் 100 நாள் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அந்த வகையில், இந்த திட்ட நிதியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களுக்கு கோடிக்கணக்கில் நிலுவையில் வைக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை பெரும் உரிமையைப் பெற்றனர். காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கிய சிறப்பு வாய்ந்த இந்த திட்டத்தின் 14.42 கோடி மக்கள் பயனாளிகளாக இருக்கின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டில் உள்ள 80 சதவீத மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். அப்போது, அந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் தான் அவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.
இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் ஈட்டிய வருவாயில் தான் அவர்களுடைய அடிப்படை தேவைகள் முதற்கொண்டு நிறைவேற்றி வந்தனர். ஆனால், தற்போது மோடி தலைமையிலான மத்திய அரசு 2023 - 2024 ஆம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதியில் மூன்றில் ஒரு பங்காக குறைத்துள்ளது. அதாவது, இந்த திட்டத்துக்கான நிதியை 33 சதவீதம் அளவுக்கு குறைத்துவிட்டது. மேலும், இந்த ஆண்டு 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.6,366 கோடி பணத்தை தராமல் மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.