இறுதிக்கட்டத் தேர்தல் நாளை (01-06-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று (30-05-24) மாலையுடன் முடிவடைந்தது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கிடையே பல்வேறு ஊடகங்களுக்குப் பிரதமர் மோடி பேட்டிகளை அளித்து வந்தார். அந்த வகையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி பேசுகையில், “கடந்த 75 ஆண்டுகளில் மகாத்மா காந்தி போன்ற ஆளுமைகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு. மகாத்மா காந்தி பற்றிய திரைப்படம் வெளியாகும் வரை அவரைப் பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
மகாத்மா காந்தி குறித்த பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து வந்தது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மகாத்மா காந்தி குறித்து திரைப்படம் வெளியாகவில்லை என்றால், அவரை யாருக்கும் தெரியாது என்பது உண்மையெனில், குஜராத் கலவரம் நடக்கவில்லை என்றால் மோடியை யாருக்கும் தெரிந்திருக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.