கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் அண்டை மாநிலங்களாக உள்ளது. இந்த இரு மாநிலங்களில் எல்லைப் பகுதியில் பெலகாவி மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டம் கர்நாடகா மாநிலத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் கன்னட மொழி பேசும் மக்களை விட மராட்டிய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். பெலகாவி மாவட்டத்தில் மராட்டிய மொழி பேசும் சில பகுதிகளை மகாராஷ்டிராவுக்கு சொந்தம் என மகாராஷ்டிரா மாநில அரசு கூறி வருவதோடு, அந்தப் பகுதிகளை மகாராஷ்டிராவில் இணைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கூறி வருகிறது.
இதில் குறிப்பாக, அந்தப் பகுதிகளை மகாராஷ்டிராவில் இணைக்க வேண்டும் என மராட்டிய ஏகிகிரண் சமிதி (எம்.இ.எஸ்) அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதற்காக அவர்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், கர்நாடகாவில் உள்ள எந்தப் பகுதிகளையும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இணைக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறி வருகிறது. இதனால், நீண்டகாலமாக இந்த இரு மாநிலங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே எம்.இ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள், கர்நாடகா மாநிலம் உருவாக்கப்பட்ட நவம்பர் 1 ஆம் தேதியை ஒவ்வொரு வருடமும் கருப்பு தினமாக அனுசரித்து வருகிறார்கள். அதன்படி, நவம்பர் 1 ஆம் தேதியான இன்று கர்நாடகா மாநிலம் உருவாக்கப்பட்ட தினமாகும். அதனால், இன்று (01-11-23) எம்.இ.எஸ் அமைப்பினர் கருப்பு தினமாக அனுசரித்து கர்நாடகத்திற்குள் நுழைவு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தை ஆதரித்து மகாராஷ்டிரா அமைச்சர்கள் ஷம்பு ராஜே தேசாய், சந்திரகாந்த் பாட்டீல், தீபக் கேசர்கார், தைய்ரியஷீல் மானே எம்.பி ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இதையடுத்து, பெலகாவி மாவட்ட நிர்வாகம், மகாராஷ்டிரா மாநில 3 அமைச்சர்கள் மற்றும் எம்.பியும் பெலகாவி மாவட்டத்திற்கு நுழைய அதிரடி தடை விதித்துள்ளது. மேலும், மாவட்டத்திற்குள் யாரும் ஊர்வலம், போராட்டம், பேரணி ஆகியவற்றை நடத்த நாளை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.