மகாராஷ்டிரா மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை (27.11.2019) மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அந்த நிகழ்வை நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பாஜக கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்த்த தேவேந்திர பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பட்னாவிஸுக்கு முன்பாகவே துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை கூட்டத்தை நாளை (27.11.2019) காலை 08.00 மணிக்கு கூட்டுவதற்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இதனிடையே இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்ட காளிதாஸுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் நாளை (27.11.2019) பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
இந்நிலையில் மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களின் கூட்டம் சரத்பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கூட்டணி தலைவராகவும் உத்தவ் தாக்கரேவை எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்தனர். அதனை தொடர்ந்து உத்தவ் தாக்கரே கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சென்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.
அதன்பிறகு டிசம்பர் 1- ஆம் தேதி மகாராஷ்டிரா மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். பதவி ஏற்பு விழா மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெறவுள்ளது. சிவசேனா கட்சியை சேர்ந்த ஒருவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வராக பதவியேற்பது இது முதல்முறை.