மத்தியப்பிரதேச சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், வாக்கெடுப்பு நடத்தப்படாமல் மார்ச் 26 ஆம் தேதி வரை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகிக் கடந்த வாரம் பாஜகவில் சேர்ந்தார் . அவருக்கு ஆதரவாக 22 ஆளும் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்ள பாஜக தலைமை தங்களது 107 சட்டமன்ற உறுப்பினர்களை அரியானாவின் கூர்கான் நகரில் உள்ள ஐ.டி.சி. நட்சத்திர விடுதியில் தங்கவைத்தது. அதேபோல காங்கிரஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 92 பேர் ராஜஸ்தான் அழைத்துச் செல்லப்பட்டு, சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். இந்தநிலையில், கடந்த 13 ஆம் தேதி ஆளுநர் லால்ஜி தாண்டனை கமல்நாத் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, மார்ச் 16-ந் தேதி சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து விடுதிகளில் தங்கவைக்கப்பட்டிருந்த காங்கிரஸ், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று போபால் வந்தடைந்தனர். இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூடியதும் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டன. மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்துப் பேரவைத் தலைவர்தான் முடிவு எடுக்க முடியும் எனக் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பைத் தள்ளிவைக்கவேண்டும் என கமல்நாத் ஆளுநருக்குக் கடிதம் ஒன்றும் எழுதினார். இந்தச் சூழலில் வரும் 26 ஆம் தேதி வரை சட்டசபை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.