மத்திய பிரதேசத்தில் வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கேட்ட லஞ்சப்பணம் தரமுடியாத நிலையில் விவசாயி ஒருவர் தனது எருமை மாட்டை லஞ்சமாக கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் திகம்கரைச் சேர்ந்த விவசாயி லஷ்மி யாதவ் தனது நிலத்தை தன் பெயருக்கு பட்டா மாற்ற வருவாய் துறை அதிகாரியிடம் சென்றுள்ளார். அந்த அதிகாரி பட்டா மாற்ற லஞ்சமாக ஒரு லட்ச ரூபாய் கேட்டுள்ளார். முதல் தவணையாக அந்த விவசாயி 50 ஆயிரம் ரூபாய் தந்த நிலையில் மீத தொகையை தர முடியாத நிலையில் அந்த அதிகாரி மீதி தொகைக்காக தொடர்ந்து அந்த விவசாயியை மிரட்டி வந்துள்ளார்.
இதனால் வேறு வழியின்றி அவர் மேற்கொண்டு லஞ்சப் பணத்திற்கு பதிலாக தன்னிடம் உள்ள எருமை மாட்டை அவருக்கு வழங்க முடிவெடுத்து, அதனை அவரது ஜீப்பில் கட்டி அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதி துணை நீதிமன்ற நடுவர் வந்தனா ராஜ்புத் இது தொடர்பான விசாரணையை தொடங்க முன்வந்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அந்த அதிகாரியிடம் அவர் விசாரித்த போது அந்த விவசாயி கூறுவது முற்றிலும் பொய், அவரிடம் லஞ்சம் கேட்கவே இல்லை என கோரியுள்ளார். மேலும் இதனை தொடர்ந்து தற்போது அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.