காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் இடம்பெற்ற தேசியக் கொடியில் 'மேட் இன் சைனா' என குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் ஹாலிபேக்ஸ் நகரில் 65 ஆவது சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டின், மாநிலங்களின் சபாநாயகர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இம்மாநாட்டில் இந்தியா சார்பில் பயன்படுத்தப்பட்ட தேசியக் கொடிகளில் 'மேட் இன் சைனா' என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாநாட்டில் தமிழகத்தின் பிரதிநிதியாக தமிழக சபாநாயகர் அப்பாவு இடம்பெற்றிருந்தார். அதேபோல் இந்தியா சார்பில் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு சபாநாயகர்கள் கையில் தேசியக் கொடி ஏந்திய வண்ணம் பேரணியாக வந்தனர். அந்த தேசியக்கொடிகளில் 'மேட் இன் சைனா' என எழுதப்பட்டிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனியார் சேனல் ஒன்றுக்கு கனடாவிலிருந்து தொலைபேசியில், பேசிய தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு ''இந்தியாவின் பெருமை வெளிப்படுத்துவதற்காக பேரணியாக தேசியக் கொடிகளை ஏந்திக்கொண்டு சென்றோம். அந்த கொடிகளில் 'மேட் இன் சைனா' என இருந்தது, இதைக் கண்டு பாராளுமன்ற சபாநாயகரிடம் இந்திய கொடியை பிடிக்கிறோம் அதில் 'மேட் இன் சைனா' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது என்று சொன்னவுடனே அவர் சிரித்துக் கொண்டார். அவ்வளவுதான். ஆனால் எல்லோருக்கும் கஷ்டம் இருந்தது. சைனாவில் இருந்து தேசியக் கொடியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சிவகாசி, ஈரோடு, கரூர், நாமக்கல் பகுதிகளில் நிறைய பிரஸ்கள் இருக்கிறது இரவு சொன்னால் காலையில் 100 கோடி கொடிகளை கூட தர முடியும். ஆனால் இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை'' என்றார்.
ஏற்கனவே தேசியக் கொடிகள் தயாரிப்பது மற்றும் அதை ஏற்றுவதற்கான நெறிமுறைகளிலிருந்து பாஜக அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இந்த விவகாரம்.