சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டம் 1957இன் கீழ் கனிம வளங்கள் மீதான வரி விதிப்பிற்கு மாநில அரசுகளுக்கு உரிமம் இருக்கிறதா? இல்லையா?. இந்த சட்டம் மாநில அரசுகளின் அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் இருக்கிறதா? என மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விரிவான விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (25.07.2024) தீர்ப்பளிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதி கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. 9 நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் 8 நீதிபதிகள் மாநிலங்களின் உரிமையை உறுதி செய்தனர். அதே சமயம் இந்த தீர்ப்பில் நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “சுரங்கங்கள், தாதுக்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்ட விதிகளில் மாநில உரிமைகளைக் கட்டுப்படுத்தும் பிரிவுகள் எதுவும் இல்லை. இது தொடர்பாக நாடாளுமன்றம் வரம்பு நிர்ணயிக்காத வரை, கனிமவள வரிகளை விதிக்கும் மாநிலத்தின் உரிமை பாதிக்காது. கனிம வளங்கள் மீது வரிவிதிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே உள்ளது. மாநிலங்களில் உள்ள கனிம வளத்துக்காக மத்திய அரசிடம் இருந்து பெறும் ராயல்டியை வரியாக கருத முடியாது” எனத் தெரரிவித்தார்.