டெல்லி மதுபான ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தினேஷ் அரோரா அப்ரூவராக மாறியதால், டெல்லி மாநில துணை முதலமைச்சருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி மாநில துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியாவின் வீடு, அலுவலகங்கள் எனச் சுமார் 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டெல்லி அரசின் கலால் கொள்கை அறிவிப்பில் விதிமீறல் இருப்பதாகக் கூறி முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்தனர். அதில், டெல்லி மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தினேஷ் அரோரா, தான் அப்ரூவராக மாறுவதாக நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
எனவே, நவம்பர் 14 ஆம் தேதி அன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவர் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமானவர் என்பதால், அவருக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.