Skip to main content

மரண அடி கொடுத்த எல்ஐசி ஐபிஓ; முதல் நாளிலேயே முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

LIC IPO trade very low

 

பெரும் எதிர்பார்ப்புடன் இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட எல்ஐசி பொதுப்பங்குகள், முதல் நாளிலேயே வெளியீட்டு விலையைக் காட்டிலும் 8 சதவீதம் வரை விலை சரிந்தது, முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


பொதுப்பங்கு வெளியீட்டில் களமிறங்கிய இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசிக்கு, முதலீட்டாளர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. அதனால், மூன்று மடங்கு வரை முதலீடுகள் குவிந்தன. இந்நிலையில், எல்ஐசி பொதுப்பங்குகள் தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை (மே 17) பட்டியலிடப்பட்டன. வெளியீட்டு விலையைக் காட்டிலும், 65 ரூபாய் தள்ளுபடி விலையில் (9 சதவீதம்), அதாவது 867.20 ரூபாய்க்கு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. 


தள்ளுபடி ஒருபக்கம் மகிழ்ச்சி அளித்தாலும், வெளியீட்டு விலையைக் காட்டிலும் குறைந்த விலையில் எல்ஐசி பங்குகள் வர்த்தகம் ஆனதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்தனர். இத்தனைக்கும், தேசிய பங்குச்சந்தையும், மும்பை பங்குச்சந்தையும் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்தன. 


இன்ட்ராடே முதலீட்டாளர்களுக்கு மட்டும் சிறிது லாபம் கிடைத்தது. அதாவது பொதுப்பங்கு பட்டியலிடப்பட்ட முதல் ஐந்து நிமிடத்தில் மட்டும் 920 ரூபாய் வரை அதிகபட்ச அளவாக உயர்ந்தது. எனினும், வெளியீட்டு விலையான 949 ரூபாயை எட்டவில்லை. 


எல்ஐசி ஐபிஓ வெளியிடும்போது இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. முதல் நாளில் ஏற்பட்ட சரிவு காரணமாக இதன் மதிப்பீடு 42500 கோடி ரூபாய் வரை சரிந்து 5.57 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்