குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஜார்கண்ட், மேற்கு வங்காளம், டெல்லி, மகராஷ்டிரா, பீகார், ஆந்திரா, புதுச்சேரி, மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய பாஜக ஆளாத 11 மாநில முதல்வர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், ‘’வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது நாட்டின் அடிப்படை தத்துவம். ஆனால் சில சக்திகள் ஒற்றுமையாக வாழும் மக்களிடம் பிரிவினைவாதம் என்ற விஷத்தை விதைக்கிறார்கள். இதை அனுமதிக்கக்கூடாது. ஜனநாயகத்தையும் மதசார்பின்மையையும், பாதுகாக்க வேண்டியது இந்த காலகட்டத்தின் கட்டாயமாகும்.
எல்லா கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு சமூக நன்மைக்காக ஒன்று சேர்ந்து ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் தயாராக வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள இந்த சிக்கலை அனைவரும் ஓரணியில் திரண்டு எதிர்கொள்ள வேண்டும். தேசிய குடியுரிமை பதிவேட்டை குறித்துதான் தற்போது கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் செயல்பாடுகளை தேசிய குடியுரிமை பதிவேட்டிற்காக பயன்படுத்தப்போவதாக கூறப்படுகிறது. எனவே தான் கேரளாவில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் செயல்பாடுகளை நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம். இது போல குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாட்டிற்கு ஆபத்தை எற்படுத்தும் என்பதால் அந்த தீர்மானத்தை வாபஸ் பெற கோரி கேரள சட்டசபையில் கடந்த 31ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இதுபோல அனைத்து மாநிலங்களும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும். அப்படி செய்தால் மத்திய அரசு தனது முடிவை மாற்ற வாய்ப்பு உள்ளது’’என்று குறிப்பிட்டுள்ளார்.