பல வருடங்களாகவே 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற கூற்றை மத்திய பாஜக அரசு வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த குழுவில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழு உறுப்பினர்களை நியமித்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம்நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அதே சமயம் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் உடன் சட்டத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.