கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க லஞ்சமாக வாங்கிய பணத்தை வாயில் போட்டு விழுங்கிய பெண் போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ளது சந்த்காட். இங்குள்ள காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் தீபாலி காட்கே. இந்தக் காவல்நிலையத்திற்கு பாஸ்போர்ட்க்கான நன்னடத்தைச் சான்றிதழ் வாங்கச் சென்ற 28 வயது வாலிபரிடம் தீபாலி காட்கே ரூ.300 லஞ்சமாக தரவேண்டும் எனக் கூறிய நிலையில், அந்தப் பணத்தைத் தர ஒப்புதல் அளித்தார்.
இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீஸில் அந்த வாலிபர் புகாரளித்த நிலையில், ரசாயனம் தேய்த்த ரூபாய் நோட்டுகளை காவல்துறையினரின் அறிவுரையின் படி, தீபாலியிடம் வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தீபாலியைப் பிடிக்க முயன்றனர்.
அப்போது கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, தீபாலி தன்னிடமிருந்த ரூபாய் நோட்டுகளை வாயில் போட்டு விழுங்கினார். அங்கிருந்த காவலர் ஒருவர் தீபாலியின் வாயில் இருந்த ரூபாய் நோட்டின் சிறு பகுதியை சாதுர்யமாகப் பிடுங்கிய நிலையில், தீபாலி கைது செய்யப்பட்டுள்ளார்.