கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இந்த ஊரடங்கு காலத்தில் பணியில் இருந்த அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகவே ராஜஸ்தானில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை மருத்துவ அதிகாரிகள் அவர்களின் குடும்பத்துக்கு தெரிவித்தனர். இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் செய்வதறியாது திகைத்தனர். மகனை சந்திக்க வேண்டும் என்று அருண் குமாரின் அம்மா குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவரின் குடும்பத்தினர் கோட்டயம் ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் சுதீர் பாபு அவர்களுக்கு தேவையான அனுமதி சீட்டுக்களை வழங்கியுள்ளார். இதனை அடுத்து கடந்த 11ம் தேதி பயணத்தை ஆரம்பித்த அவரது குடும்பத்தினர் தமிழ்நாடு, கர்நாடகம், மராட்டியம் குஜராத் மாநிலங்கள் வழியாக ராஜஸ்தான் சென்றடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகனை சந்தித்த அவரின் தாய் கடவுளின் அருளால்தான் என் மகனை இங்குவந்து சந்திக்க முடிந்தது என்று தெரிவித்தார். இதற்காக அவர்கள் 2700 கிலோ மீட்டர் பயணம் செய்தனர். சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானாவில் சிக்கி தவித்த தன் மகனை 1400 கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்தில் சென்று தாய் ஒருவர் மீட்ட நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.