Skip to main content

கைதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நேர்ந்த சோகம்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

kerala trainee doctor vandana dass incident

 

கேரள மாநிலம் கொட்டாரக்கரா பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப். பள்ளி ஆசிரியரான இவர் மதுவுக்கு அடிமையான நிலையில் அக்கம் பக்கத்தினருடன் தொடர்ந்து வாக்குவாதம் மற்றும் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதே போன்று நேற்று இரவு மது அருந்திவிட்டு அவரது  பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சந்தீப்பை உடனடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

 

இந்நிலையில், இன்று காலை கொட்டாரக்கரா அரசு தலைமை மருத்துவமனைக்கு சந்தீப்பை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் வந்தனா தாஸ், சந்தீப்புக்கு சிகிச்சை அளித்தார். அப்போது திடீரென சந்தீப், பயிற்சி மருத்துவர் வந்தனா தாஸை தாக்கியதுடன் அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து மருத்துவரின் உடலின் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார். இச்சம்பவத்தை அறிந்த போலீசார் சந்தீப்பை பிடிக்க முயன்றபோது போலீசாரையும் அங்கிருந்த மற்ற மருத்துவமனை ஊழியர்களையும் தாக்கியுள்ளார். இதையடுத்து கொட்டாரக்கரா போலீசார், மருத்துவமனை ஊழியர்கள் உதவியுடன் சந்தீப்பை அங்கிருந்து காவல் நிலையத்திற்கு மீண்டும் அழைத்து சென்றனர்.

 

இந்த சம்பவத்தால் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த வந்தனா தாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; உயிரிழந்த பயிற்சி மருத்துவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்; இச்சம்பவத்துக்கு காரணமான சந்தீப்புக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறி  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இச்சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“டாக்டர் டீ குடிக்கக் கூடாதா...” - இ.எஸ்.ஐ. அவலம்!

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Shouldn't you drink Dr. Tea? -ESI

 

சிகிச்சைக்காக  தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் அளவுக்கு வசதியில்லாத அந்தப் பெண் வீட்டில், “நீ வேலை பார்க்கும் நிறுவனத்தில் உன் சம்பளத்திலிருந்து இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்கிறார்களே? தீராத தலைவலிக்கு அங்கு போய் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே?” என்று கூற, அந்தப் பெண்ணோ “இன்று ஞாயிற்றுக்கிழமை டாக்டர்கள் வருகிறார்களோ இல்லையோ? விடுமுறை நாளோ? ஒன்றும் தெரியவில்லையே?” என்றிருக்கிறார். அந்த வீட்டில் நம்மைத் தொடர்பு கொண்டு இதுகுறித்துப் பேச, வலைத்தளத்தில் விபரம் தெரிந்துகொண்டு “இன்று மதியம் 1 மணி வரை இ.எஸ்.ஐ. மருத்துவமனை வேலை நேரம்” எனக் கூறினோம்.

 

அந்தப் பெண் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்குக் கிளம்பியபோது நம்மையும் அழைக்க, உடன் சென்றோம். நாம் சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்குச் சென்றபோது பகல் மணி 11.30. அங்கிருந்த தகவல் பலகையில் வெளிநோயாளிகள் பார்க்கும் நேரம் 8 மணி முதல் 12 மணி வரை எனப் போட்டிருந்தனர். ஆனால், எந்தப் பிரிவிலும் மருத்துவர் ஒருவர்கூட இல்லை. செவிலியர் ஒருவரிடம்  ‘டாக்டர் எங்கே?’ எனக் கேட்டோம்.  “இப்போதுதான் ஓ.பி. பார்த்துட்டு கிளம்பினார்.” என்றார்.  ‘யாரிடம் புகார் தெரிவிப்பது?’ என்று கேட்டபோது,  ‘புகார் எழுதுறதுன்னா.. ஒரு தாளில் எழுதி.. அங்கிருக்கும் புகார் பெட்டியில் போட்டுவிட்டுக் கிளம்புங்க..” என்று புகார் பெட்டி இருக்கும் இடத்தைக் கைகாட்டிவிட்டு, “டாக்டர் டீ குடிக்கப் போயிருக்கிறார். வெயிட் பண்ணுங்க. போன் பண்ணி வரச் சொல்லுறேன்.” என்றார்  கூலாக.  

 

Shouldn't you drink Dr. Tea? -ESI

 

நாம் இ.எஸ்.ஐ. மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக்கை தொடர்புகொண்டு இது குறித்துப் பேசினோம்.  “இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைங்கிறதுனால ஓபில நோயாளிங்க எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்திருக்கும். யாராச்சும் ஒரு டியூட்டி டாக்டர் இருப்பாரே? டிஸ்பென்சரில கூட்டம் இருக்கும். ஆஸ்பத்திரிக்கு நோயாளிங்க ரொம்ப பேரு வரமாட்டாங்க. டாக்டர் அங்கேதான் இருப்பாரு. அங்கிட்டு எங்கேயாச்சும் போயி யாருகிட்டயாவது பேசிட்டு இருப்பாரு. நான் டாக்டரை வரச் சொல்லுறேன்.” என்று சமாளித்தார்.

 

esi hospitel

 

அடுத்த சில நிமிடங்களில் டாக்டர் பாரத்குமார் பரபரப்புடன் வந்து வெளி நோயாளிகள் பிரிவில் அமர்ந்தார்.  நாம் அவரிடம் பேசியபோது, “இன்னைக்கு காலைல 8 மணில இருந்து 11.06 மணி வரைக்கும் 40 நோயாளிங்களை நான் ஒரு டாக்டர் இருந்து பார்த்திருக்கேன். எல்லா நோயாளிகளையும் பார்த்துட்டுத்தான் போனேன்.  அதுக்குள்ள சூப்பிரண்டுகிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிருக்கீங்க. அவரு ரெண்டு தடவை போன் பண்ணிட்டாரு. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைலகூட பார்க்க முடியாத சர்ஜரிய நான் பண்ணிருக்கேன். அந்த நல்ல விஷயத்தை எல்லாம் பத்திரிகைல எழுதமாட்டீங்க. டாக்டர் டீ குடிக்கக் கூடாதா? டீ குடிச்சிட்டு வர்றதுக்குள்ள?” என்று டென்ஷனானார்.  

 

டாக்டரோ, சாமானியரோ,  டீ குடிப்பதற்கு முக்கால் மணி நேரத்துக்கு மேல் ஆகுமா என்பதுதான் கேள்வி! எத்தனை திறமையாகப் பணியாற்றினாலும் வேலை நேரத்தில் தனது இருக்கையில் டாக்டர் ஏன் இல்லை என்பதுதான் நோயாளிகளின் ஆதங்கம்!

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த குடுமி பிடி சண்டை; காவல் நிலையம் முன்பு  பரபரப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

nn

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரைச் சேர்ந்தவர் வாலிபர் ஒருவர். இவர் நகரின் மையப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, பெற்றோர், தம்பி ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் வாலிபருக்கும் அவரது நண்பனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது, நாளடைவில் முறையற்ற தொடர்பாக மாறியதால் வாலிபர் வீட்டை விட்டு வெளியேறி நண்பனின் மனைவியுடன் வேறு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இரண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் வாலிபரின் தந்தை திடீரென உயிரிழந்து விட்டார். தந்தையின் இறுதிச்சடங்குகள் செய்ய வாலிபர் தனது வீட்டிற்கு சென்றார். இறுதி சடங்குகள் முடிந்ததும் வாலிபரின் மனைவி, கணவரை முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணின் வீட்டுக்கு மீண்டும் செல்லவிடாமல் தடுத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 

கடந்த ஒரு வார காலமாக வாலிபருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண் அவரை பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை,  அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பெண் வாலிபரை பல இடங்களில் தேடினார். அப்போது அவர் தனது முதல் மனைவியுடன் வேறு ஒரு இடத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற அப்பெண் வாலிபர் வசித்து வரும் வாடகை வீட்டின் கண்ணாடிகளை கல் வீசி தாக்கியதோடு அங்கேயே கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து புகார் அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட செல்போன் கடை வாலிபர் தனது முதல் மனைவியுடன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு வாலிபர் புகார் அளிக்க வந்திருப்பது குறித்து தெரிந்தது, உடனே அவர் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அப்போது அங்கு வந்து இருந்த  வாலிபரை பிடித்த அந்தப்பெண் 'என்னுடன் வாழு வா' என சட்டையை பிடித்து இழுத்தார். அவர் வர மறுத்ததால் அவரை தாக்கினார்.

 

இதை பார்த்து கோபமான வாலிபரின் மனைவி, 'என் கணவரையா அடிக்கற' என கணவரின் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணை தாக்கினார். இது நகர காவல் நிலையம் முன்பாக  நடைபெற்றது. இரண்டு  பெண்களும் காவல் நிலையம் முன்பாக கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியான போலீசார், அவர்களை சமாதானம் செய்ய வந்து அடித்துக்கொண்ட இருவரையும் விலக்கி விட்டனர். அவர்கள்  போலீசாரையும் தள்ளிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

 

இதனை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசாரும், அங்கேயே உள்ள அனைத்து மகளிர் பெண் போலீசாரும் ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்