சமீபத்தில், கேரள ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. கேரள ஆளும் கட்சிக்கும், ஆளுநருக்கும் தொடர்ந்து பனிப்போர் நிலவி வந்த சூழலில், கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிஃப் கான் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளாகவும், 5 மசோதாக்கள் 1 ஆண்டாகவும் நிலுவையில் உள்ளன என்று கூறி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னை தாக்க சதி திட்டம் செய்துள்ளதாக கேரள ஆளுநர் ஆரிஃப் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரள மாநில ஆளுநர் ஆர்ஃப் கான் டெல்லி செல்வதற்காக நேற்று (11-12-23) திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பு ஆளுநரின் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதில் கோபம் அடைந்த ஆளுநர் ஆரிஃப் கான், காரில் இருந்து கீழே இறங்கி ஆவேசமாக பேசினார். அப்போது, கேரள மாநில அரசு தனக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “முதல்வர் நடத்தும் நிகழ்ச்சியில் இது போன்ற போராட்டங்களை அனுமதிப்பார்களா?. முதல்வரின் கார் அருகே யாராவது வர இயலுமா?. ஆனால், எனது கார் சென்ற வழியில் போராட்டக்காரர்கள் இருந்தனர்.
இது நிச்சயமாக முதல்வர் பினராயி விஜயனின் சதி. இதன் மூலம், என்னை உடல்ரீதியாக காயப்படுத்தச் சதி செய்ய அவர் ஆட்களை அனுப்பியுள்ளார். முதல்வரும் எனக்கும் ஏதாவது விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றால், அவர் என்னை தாக்கச் சதி செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. கேரள அரசின் அரசியலமைப்பு சீரழிந்து வருவது போல் தெரிகிறது. அரசியலமைப்பு இயந்திரத்தின் சீர்குலைவை அனுமதிக்க முடியாது” என்று கூறினார்.