Skip to main content

மக்களை வியக்கவைக்கும் கேரளா அரசு பேருந்து! அசத்தும் தம்பதி! 

Published on 22/07/2022 | Edited on 22/07/2022

 

Kerala government bus that surprises people

 

இளைஞா்கள், இளம் பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் வயதானவா்கள் என காத்து நின்று ஏறக்கூடிய கேரளா அரசு பேருந்து ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டுகளை அள்ளி குவித்து வருகிறது. அந்த பேருந்துக்கு மட்டும் அப்படி என்ன விசேஷம் என்று கேட்க தோன்றுகிறது அல்லவா?

 

ஆலப்புழயை சோ்ந்த இளம் தம்பதி கிரி - தாரா. கரோனா காலக்கட்டத்திற்கு முன் பஸ்சில் பயணம் செய்த போது கிரியும் தாராவும் பழகி காதலா்களாக மாறினார்கள். பின்னா் சுமார் 2 ஆண்டு காலம் கரோனாவால் பஸ் பயணம் இல்லாமல் கரோனா முடிந்ததும் திருமணம் செய்து கொண்டு திருமணம் முடித்த கையோடு அவா்கள் இருவரும் கண்டு பழகிய அந்த பஸ்சில் ஏறி 5 கிமீ தூரம் பயணம் செய்தனா்.

 

Kerala government bus that surprises people

 


இருவரையும் மண வாழ்க்கையில் இணைத்த கேரளா அரசு பேருந்தில் ஊழியராக சேர கணவன் மனைவி இருவரும் முடிவு செய்தனா். இதற்காக கேரளா பப்ளிக் சா்வீஸ் கமிஷன் தோ்வு எழுதினார்கள். இதில் முதலில் கணவா் கிரிக்கு ஹரிப்பாடு டிப்போவில் ஹரிப்பாடு - ஆலப்புழ செல்லும் வழித்தடத்தில் டிரைவா் வேலை கிடைத்தது. அதன் பிறகு 3 மாதம் கழித்து கிரி ஓட்டும் அதே பேருந்தில் தாராவுக்கு நடத்துநர் வேலை கிடைத்தது.

 

கணவன் மனைவி இருவரும் ஒரே  பேருந்தில் வேலை செய்வது பயணிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு பேருந்தை இயக்குவதற்கு முன் இருவரும் சோ்ந்து சொந்த வாகனம் போல் அதை கழுவி தூய்மை படுத்திய பிறகு தான் பேருந்தை இயக்குவார்கள். அதன் பிறகு இரவு பேருந்தை நிறுத்தும் போது சுத்தம் செய்து கற்பூரம் காட்டி திரி கொளுத்தி வைத்து செல்கின்றனர்.

 

Kerala government bus that surprises people

 


அவா்களுடைய சொந்த செலவில் பயணிகளின் பாதுகாப்புக்காக பேருந்துக்குள் 6 சிசிடிவி காமிராக்கள், ஆபத்து நோ்ந்தால் டிரைவருக்கு தெரியப்படுத்த எமா்ஜென்சி சுவிட்ச், குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த விளையாட்டு பொம்மைகள், பயணிகளுக்கு மனோகரமாக பாட்டு கேட்டு பயணிக்க ஆடியோ, இரவு நேரங்களில் கண்ணை கவரும் விதத்தில் எல்.இ.டி அலங்கார லைட்டுகள் பயணிகள் படிப்பதற்கு பத்திரிகை எனப் போக்குவரத்துத் துறை அனுமதியோடு இதையெல்லாம் செய்துள்ளனர். 

 

Kerala government bus that surprises people

 

 

அதுபோல் பயணிகள் பேருந்துக்குள் ஏறி சீட்டில் உட்கார்வது, பேருந்தில் இருந்து இறங்கியபின் கதவை அடைப்பது உள்ளிட்டவற்றை உறுதிபடுத்திய பின்பு தான் பேருந்தை இயக்குகிறார் டிரைவா். வயதானவா்கள் குழந்தைகள் பேருந்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் நடத்துநர் தாரா கையை பிடித்து உதவி செய்கிறார். பயணிகளும் இந்த பேருந்தில் சுற்றுலா போறது போல் சுகமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

 


இது குறித்து கிரியும் தாராவும் கூறும் போது, “இருவரும் சோ்ந்தே வீட்டிலும், பேருந்திலும் வேலை செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது கடவுள் தந்த பாக்கியம் தான். பேருந்தை எங்க குழந்தை போல் பார்த்து பொன்னு போல் பாதுகாக்கிறோம். இந்த பேருந்தில் ஏறுவதற்கு என்று ஒரு பயணிகள் கூட்டமே காத்து நிற்கும். எம்.எஸ்.என் மற்றும் டி.கே.என் கல்லூரி மாணவ மாணவிகள் இந்த பேருந்தில் மட்டும் தான் ஏறுவார்கள். இது அவா்களுக்கு ஒரு வகுப்பறை போல் இருப்பதாக கூறுகிறார்கள் என்பது சந்தோஷமாக உள்ளது. இதுவரையில் இந்த பேருந்தில் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடந்ததில்லை. அதே போல் வசூலும் அதிகம் கொடுப்பதால் அதிகாரிகளும் பாராட்டுகின்றனா்” என்றனா். 


 

சார்ந்த செய்திகள்