நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அசாம், பீகார், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு கோடி மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். அதேபோல் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 160- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தென் மாநிலங்களிலும் விட்டு வைக்காத கனமழையால் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 50க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்தனர். மேலும் பல பேர் காணவில்லை.
இதுவரை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. பலர் வீடுகளை இழந்துள்ளனர். 2.87 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காணாமல் போன 58 பேரில் 50 பேர் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள். இந்த பகுதியில் 24 பேர் பலியாகி உள்ளனர். இது கேரளாவில் மிக அதிக எண்ணிக்கையாகும். கேரள மாநிலத்தில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினருமான ராகுல் காந்தி மழையால் அதிக பாதிப்பை சந்தித்த வயநாடு பகுதியை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கேரள மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட கூடிய இடங்களை அரசு முன் கூட்டியே கண்டறிந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம் எனவும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் அதிகமாக இருப்பதால், காடுகளின் பரப்பளவு குறைந்துள்ளது. எனவே மக்கள் வாழ்வாதாரம், சுற்றுச்சுழல் உள்ளிட்டவை பாதுகாக்க, நீண்ட கால செயல் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார்.