இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.
இந்நிலையில் பாஜக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம் பழைய நாடாளுமன்றத்தின் வளாகத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். அமித்ஷா மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவதற்கு வழிமொழிந்ததோடு நாடாளுமன்றக் குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும், பிரதமர் மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.
இதனையடுத்து, பிரதமர் மோடி தனது உறுதியை ஆரம்பிப்பதற்கு முன்பு, இந்திய அரசியல் சாசன புத்தகத்தைத் தொட்டு தலைவணங்கினார். இதனையடுத்து அவர், “என்.டி.ஏ என்றால் சிறப்பு நிர்வாகம் என்ற பொருள். அரசு எப்படி நடக்கிறது? எதனால் நடக்கிறது? என்பது இப்போதுதான் மக்களுக்கு தெரிந்துள்ளது. இந்தக் கூட்டணி, ஆட்சிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல தேர்தலுக்கு முன்பே அமைந்தக் கூட்டணி. ஒரு அரசை நடத்துவதற்கு ஒருமித்த கருத்துதான் அவசியம்; பெரும்பான்மை முக்கியமல்ல. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் சமமானவை தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்'” என்று பேசியிருந்தார்.
பிரதமர் மோடி அரசியல் சாசனத்தை தொட்டுத் தலை வணங்கியதைக் கேரளா காங்கிரஸ் கேலியாக விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து கேரள காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், மோடி அரசியல் சாசனத்தை தொட்டு வணங்கிய புகைப்படத்தை பகிர்ந்து, ‘அந்தப் பயம் இருக்கனும் டா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தேர்தல் பிரச்சாரத்தின் போது பா.ஜ.க மீண்டும் தனிப்பெருபான்மையுடன் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை மாற்றிவிடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உட்பட எதிர்கட்சியினர் விமர்சனம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"Antha bhayam irukkanum da!"
(Let that fear be there) pic.twitter.com/WQqxxZ3qdz— Congress Kerala (@INCKerala) June 7, 2024