Skip to main content

“கடவுள் உங்களை மன்னிக்கமாட்டார்” - பிரதமர் மோடி மீது கெஜ்ரிவால் கடும் விமர்சனம்

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Kejriwal criticizes PM Modi

டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.பியுமான ஸ்வாதி மாலிவால், போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இது தொடர்பாகக் கடந்த 13ஆம் தேதி காலை ஸ்வாதி மாலிவால் போலீசாரை தொடர்புகொண்டு, டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் மீது கடந்த 16ஆம் தேதி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரித்து வந்தனர். இதனையடுத்து, டெல்லி போலீசார் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தாக்கப்பட்டதாகக் கூறும் ஸ்வாதி மாலிவால், பா.ஜ.க முகமாக இருக்கிறார் என்றும், பா.ஜ.கவின் சதித் திட்டத்தின் அடிப்படையில்தான் அவர் பொய்க் குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்றும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வருகிறது. 

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெற்றோர் மற்றும் மனைவியிடம் போலீஸ் விசாரணை நடத்துகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘நான் என் பெற்றோர் மற்றும் மனைவியுடன் காவல்துறைக்காகக் காத்திருக்கிறேன். நேற்று போலீசார் எனது பெற்றோரை அழைத்து விசாரணைக்கு நேரம் கேட்டனர். ஆனால் வருவார்களா, வரமாட்டார்களா? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் தனது அலுவலகத்தில் இருந்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் மோடிக்கு ஒரு செய்தி மற்றும் வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் எனது எம்.எல்.ஏக்களை கைது செய்தீர்கள். ஆனால் நான் உடையவில்லை. நீங்கள் என் அமைச்சரைக் கைது செய்தீர்கள், ஆனால் உங்களால் என்னைக் கீழே தள்ள முடியவில்லை. நீங்கள் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தீர்கள். நான் சிறையில் துன்புறுத்தப்பட்டேன்.

ஆனால் இன்று நீங்கள் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டீர்கள். என்னை உடைக்க நீங்கள் என் வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட பெற்றோரை குறிவைத்தீர்கள். எனது தாயார் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். நான் கைது செய்யப்பட்ட நாள் அன்று அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பியிருந்தார். எனது தந்தைக்கு 85 வயது, அவருக்கு காது கேளாமை உள்ளது. என் பெற்றோர்கள் குற்றவாளிகள் என்று நினைக்கிறீர்களா? கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்