நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22 ஆம் தேதி (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23 ஆம் தேதி (23.07.2024) தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் ரிஜிஜு வக்ஃப் வாரிய திருத்தச் சட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். இது தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி., கே.சி. வேணுகோபால் பேசுகையில், “நாங்கள் இந்துக்கள். ஆனால் அதே சமயம் மற்ற மதங்களின் நம்பிக்கையை மதிக்கிறோம். இந்த மசோதா மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்களுக்காக பிரத்தியேகமானது. கடந்த முறை இந்திய மக்கள் அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை. இது உங்களுக்குப் பாடம் கற்பித்தது. கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல். இந்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான ஒரு அடிப்படைத் தாக்குதலாகும்.
இந்த மசோதா மூலம், இஸ்லாமியர் அல்லாதவர்களும் வக்ஃப் ஆட்சிக் குழுவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற விதியை போடுகிறார்கள். இது மத சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல். அடுத்து கிறிஸ்துவர்களுக்குப் போவீர்கள். பிறகு ஜைனர்களுக்குச் செல்வீர்கள். இந்திய மக்கள் இப்போது இந்த மாதிரியான பிரித்தாளும் அரசியலை உள்வாங்க மாட்டார்கள்” எனப் பேசினார். மேலும் திமுக எம்பி கனிமொழி கூறுகையில், “சிறுபான்மையினர் தங்கள் நிறுவனங்களை நிர்வகிப்பது தொடர்பான சட்டப்பிரிவு 30இன் நேரடி மீறல். இந்த மசோதா ஒரு குறிப்பிட்ட மதத்தினரைக் குறிவைக்கிறது” எனத் தெரிவித்தார்.