சட்டவிரோத வீட்டுக்காவலில் வைத்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறியதை காஷ்மீர் காவல்துறை மறுத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கு வழிவகை செய்யும் 370வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. அதனைத்தொடர்ந்து அம்மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இவர்களில் பெரும்பாலானோர் ஓராண்டுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட நிலையில், மெகபூபா முஃப்தி விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக அண்மையில் உச்சநீதிமன்றம் அரசுக்கு பிறப்பித்த உத்தரவில், மெகபூபா முஃப்தி விடுதலை குறித்து இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது. இதனையடுத்து 14 மாத தடுப்பு காவலுக்கு பிறகு மெகபூபா முஃப்தி கடந்த அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். இந்த சூழலில், தன்னை மீண்டும் சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் வைத்துள்ளதாக மெஹபூபா முஃப்தி தெரிவித்திருந்தார்.
மெகபூபா முஃப்தியின் இந்த குற்றச்சாட்டு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து காஷ்மீர் காவல்துறை விளக்கமளித்துள்ளது. இதுபற்றி காவல்துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி வீட்டு காவலில் வைக்கப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு புல்வாமாவுக்கு செல்லும் திட்டத்தினை தள்ளி வைக்கும்படி அவரிடம் கேட்டு கொள்ளப்பட்டது" எனத் தெரிவித்துள்ளனர்.