ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அதே போன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று (05.10.2024) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன அதன்படி ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை. இத்தகைய சூழலில் ஹரியானாவில் ரிபப்ளிக் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், பாஜகவுக்கு 18 முதல் 24 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 55 முதல் 62 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 3 முதல் 6 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பிபுள்ஸ் பல்ஸ் (Peoples Pulse) நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், பாஜக 20 முதல் 32 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 49 முதல் 61 இடங்களும், மற்றவை 3 முதல் 5 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதே போன்று சி.என்.என். நியூஸ் 18 நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 59 இடங்களும், பாஜக வெற்றி 21 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 6 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு இடங்கள் கூட கிடைக்காது என இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 இடங்களில் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் என்.டி.டி.வி. நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 46 முதல் 61 இடங்களும், பாஜகவிற்கு 20 முதல் 32 இடங்களும், பி.டி.பி. கட்சிக்கு 7 முதல் 11 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 4 முதல் 6 இடங்கள் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.