பா.ஜ.க மூத்த தலைவரான எடியூரப்பா, கர்நாடகா மாநிலத்தின், முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். இவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது கடந்த மார்ச் 15ஆம் தேதி பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்படி, பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறப்படும் 17 வயது சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், ‘கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தனது மகளுடன், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கல்வி உதவித் தொகை தொடர்பாக சந்திக்க சென்றதாகவும், அப்போது தனது மகளை தனியாக அழைத்து சென்று எடியூரப்பா பாலியல் தொந்தரவு செய்ததாகவும்’ கூறப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், பெங்களூர் சதாசிவ நகர் காவல்நிலையத்தில், எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவரான எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கிடையே, எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்பட்டு அவர் மீது போக்சோ வழக்கு தொடர்ந்த 17 வயது சிறுமியின் தாயாரான 54 வயது பெண் கடந்த மே மாதம் 26ஆம் தேதி திடீரென்று உயிரிழந்தார். இது குறித்த விசாரணையில், 17 வயது சிறுமியின் தாயார், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகத் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். பா.ஜ.க மூத்த தலைவர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடர்ந்த பெண் உயிரிழந்திருப்பது குறித்து சதாசிவ நகர் போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் எடியூரப்பா விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “தேவைப்பட்டால் பா.ஜ.க மூத்த தலைவர் பி.எஸ்.எடியூரப்பா போக்சோ வழக்கில் கைது செய்யப்படுவார். இது குறித்து மாநில குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) முடிவெடுக்கும்” என்று கூறினார்.