கர்நாடகா மாநிலம், மகரிஷி வால்மீகி பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தின் கணக்குக் கண்காணிப்பாளரான மாநில அரசு ஊழியர் சந்திரசேகரன், கடந்த மே 26 அன்று தற்கொலை செய்து கொண்டார். தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார்.
அந்தக் கடிதத்தில், ‘அரசு நடத்தும் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான ரூ.187 கோடியை, அதன் வங்கிக் கணக்கில் இருந்து அனுமதியின்றி மாற்றப்பட்டுள்ளது. மேலும், அதில் இருந்து ரூ.88.62 கோடி முறைகேடாக ஐடி நிறுவனங்கள் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பல்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இது குறித்து கேட்கையில், எனது மேல் அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதத்தின் அடிப்படையில், சந்திரசேகரனை தற்கொலைக்கு தூண்டியதாக மூன்று அரசு அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை முறைகேடு விவகாரத்தில், கர்நாடகா பட்டியல், பழங்குடியினர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பி.நாகேந்திராவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால், இந்த விவகாரத்தை பா.ஜ.க தன் கையில் எடுத்துக்கொண்டது. கர்நாடகா பா.ஜ.க மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தலைமையிலான பா.ஜ.கவினர் அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெஹ்க்லோட்டை சந்தித்து, அமைச்சர் பி.நாகேந்திராவை ராஜினாமா செய்யுமாறு முதல்வர் சித்தராமையாவுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தினர். மேலும், அமைச்சர் பி.நாகேந்திராவை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அமைச்சர் பி.நாகேந்திரா தாமாக முன்வந்து கர்நாடகா முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். இது குறித்து கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பாமல், அவர் தானாக முன்வந்து ராஜினாமா செய்துள்ளார். அவரை ராஜினாமா செய்யும்படி நாங்கள் கேட்கவில்லை. அவருடன் நாங்கள் விவாதித்தோம்” என்று கூறினார்.