Karnataka Chief Minister Siddaramaiah spoke about slogan for pakistan

இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

Advertisment

இதில், ஜே.பி. நட்டா, சோனியா காந்தி உட்பட 41 பேர் போட்டியின்றி தேர்வாகினர். அதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 இடங்களிலும், கர்நாடகா மாநிலத்தில் 4 இடங்களிலும் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இடம் என மொத்தம் 15 இடங்களில் நேற்று முன்தினம்(27-02-24) தேர்தல் நடைபெற்றது. இதில் கர்நாடகா மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 3 பேரும், பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தலா ஒருவரும் போட்டியிட்டனர்.

Advertisment

அதில், காங்கிரஸ் வேட்பாளர்கள் அஜய் மக்கான், சையத் நசீர் உசேன், ஜிசி சந்திரசேகர் ஆகிய மூன்று பேரும் வெற்றி பெற்றனர். அதே போல், பா.ஜ.க வேட்பாளர் நாராயண்சா பாண்டேகாவும் வெற்றி பெற்றார். ஆனால், பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்களை நம்பி களமிறங்கிய மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் குபேந்திர ரெட்டி தோல்வியடைந்தார். இந்த தேர்தலில், பெங்களூர் யஷ்வந்தபுரத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ எஸ்.டி சோமசேகர், காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 Karnataka Chief Minister Siddaramaiah spoke about slogan for pakistan

இதனையடுத்து, கர்நாடகா சட்டசபையான பெங்களூர் விதான சவுதாவில் காங்கிரஸ் கட்சியினர், வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதில், வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர் உசேனை சூழ்ந்து அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். அப்போது, அங்கிருந்த சிலர், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டது தொடர்பாக விதான சவுதா காவல் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல், பெங்களூர் நகர காவல்துறையும் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கோஷமிட்டவரை அடையாளம் கண்டு கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பெங்களூர் விதான சவுதாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக புகார் எழுந்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது தொடர்பான குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் யாரையும் தப்ப விடமாட்டோம்” என்று கூறினார்.